Home ஆன்மிகம் தை பிறந்தால் வழி பிறக்கும்: இதுவே உண்மை காரணம்

தை பிறந்தால் வழி பிறக்கும்: இதுவே உண்மை காரணம்

3
தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும், இது வெறும் பழமொழி அல்ல. பல தமிழரின் கண்ணீரைப் போக்கும் அறுவடைக் காலம். தை மாதம் முதல் நாள் உத்தராயணம்.

தமிழர்களின் வாழ்வியலில் விழாக்களுக்கென்று தனியான சிறப்பிடம் உள்ளது. பண்டிகைகள் என்றாலே மகிழ்ச்சி, வேடிக்கைகள், கொண்டாட்டங்கள் என்று கூறிக்கொண்டே போகலாம்.

பழந்தமிழரின் காலம் தொட்டே திருவிழாவானது நிறைய மாதங்களில் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் சிறப்பானதொரு திருவிழா மாதமாக இருப்பது தை மாதம் ஆகும்.

தொன்றுதொட்டு தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்ற பழமொழி மற்றும் முதுமொழியானது நமது வாழ்வில் கலந்தே உள்ளது. அப்படி என்ன தான் சிறப்பு உள்ளது? என்பதை அறியாமலே கூறுவோர் பலருண்டு.

உத்தராயண புண்ணிய காலம்

உத்தராயணம் என்பது வடமொழிச் சொல்லாகும். வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு என்றும், அயனம் என்றால் வழி என்றும் பொருள்.

கண்ணிற்கு புலப்படும் ஒரே இறை சக்தியாக விளங்குபவர் சூரியன் மட்டுமே. அப்படிப்பட்ட சூரியன் தனது பயணத்தை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமே உத்தராயணம் ஆகும்.

தை மாதத்தில் சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசியில் நுழைந்து 29 நாட்கள், 27 நிமிடங்கள், 16 வினாடிகள் வரை பயணிப்பார்.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாதத்திற்கு உத்தராயணம் நீடிக்கும். இக்காலமானது ஞானத்தை வழங்கும் காலமாக கருதப்படுகிறது. இதுவே தேவர்களின் காலைப் பொழுது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

புராணங்களில் தை மாதம் 

வேத, இதிகாச, புராணங்களில் இந்த தை மாதமானது சிறப்பானதொரு மாதமாக சொல்லப்பட்டுள்ளது.

மகாபாரதப் போரில் பீஷ்மர் அர்சுனனின் அம்புகளால் வீழ்ந்தும் உயிர் துறக்கவில்லை. அம்பு படுக்கையில் கிடந்தார்.

தான் விரும்பிய தருவாயில் மரணம் வேண்டும் என்ற வரத்தைப் பெற்ற அவர் “தை முதல் நாள்” அதாவது உத்தராயணம் துவங்கும் வரை காத்திருந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

உத்தராயணத்தில் தான் ஞானத்தின் வழி பிறக்கும். எனவே அப்பொழுது இறப்பவர்களுக்கு மறுப்பிறப்பு இருக்காது.

இந்த யுகத்திலும் இராமலிங்க வள்ளலார் போன்ற எண்ணற்ற சித்த புருஷர்கள் உத்தராயண காலத்தில் முக்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே புராண காலத்தில் இருந்தே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்படுகிறது என்று அறிகிறோம்.

அறுவடைக் காலம்

ஆடி மாதம் துவங்கி ஆறு மாதத்திற்கு நெற்பயிர் வளர ஆரம்பித்து தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும்.

இதில் ஆறு மாதம் விவசாயிகள் தான்பட்ட கடன், துன்பம், கவலைகள் எல்லாம் தீர்ந்து அறுவடை செய்து பணம் ஈட்டி துன்பங்கள் எல்லாம் தீர வழி பிறக்கும்.

இதனால், தை மாதத்தை தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள். இதனைத்தான் பொங்கல் விழாவாக கொண்டாடுகிறோம்.

பொதுவாக கார்த்திகை பௌர்ணமி முடிந்து மார்கழி் முடியும் வரை குடமுழுக்கு, திருமணம், புதுமனைப் புகுதல் போன்ற நிகழ்ச்சிகள் நிலுவையில் இருக்கும்.

தை மாதம் துவங்கும் போது இவை அனைத்தும் இனிதே துவங்கும். சுபகாரியங்கள் துவங்க வழி பிறக்கும் என்பதால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

முன்னோர்கள் விடைபெறும் காலம்

தட்சிணாயன காலத்தில் பூமிக்கு வரும் முன்னோர்கள், நான்கு மாதங்கள் இங்கு இருந்து தங்களின் சந்ததியினரை ஆசிர்வதிப்பார்கள்.

மீண்டும் சூரியனின் துணைக் கொண்டு பித்ரு லோகம் செல்ல பாதை பெற்று விடைப்பெறுகின்றனர் என்று நம்பப்படுகிறது. எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

பஞ்சம் தீர்க்கும் தை மாதம்

விளைச்சல் முடிந்து அறுவடை நடந்து பயிர்கள் அனைத்தும் வீடு சேரும் மாதமே தை ஆகும். தை முதல் நாள் சூரியனுக்கு படைப்பார்கள்.

இக்காலகட்டத்தில் தான் தானியப் பயிர்களில் முக்கியமாக நம் தமிழர்களின் அன்றாட உணவான நெல்லானது அதிக அளவிலும், சற்று விலை குறைவாகவும் கிடைக்கிறது.

பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு தேவையான நெல்லை மக்கள் வாங்கி பத்திரப்படுத்தி கொள்வர். வீட்டில் உணவிற்குப் பஞ்சமின்றி மகிழ்வுடன் இருக்க வழி பிறக்கும் காலம்.

இவ்வாறு ஒரு பழமொழிக்கு எண்ணற்ற விளக்கங்கள் தந்துள்ள நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. உழைப்பினால் உலகையே ஆண்டவர்கள்.

இன்று நாகரிகம் என்ற பெயரில் பல்வேறு விழாக்களையும், கொண்டாட்டங்களையும் இழந்து வருகிறோம்.

இந்த ஆண்டு தை பிறப்பிலிருந்து அனைவரும் தங்களின் பாரம்பரியத்தை மறக்காமல் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தமிழர் திருநாளான தைத்திருநாளை வரவேற்று கொண்டாடுவோம்.

Thai Piranthal Vazhi Pirakkum இது பழமொழி மட்டும் அல்ல. “தை பிறந்து அனைவருக்கும் நல்வழி பிறக்கட்டும்” 

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version