Home Latest News Tamil கூகிள் சர்ச்: ஒரு லட்சத்தை பறிகொடுத்த பெண்மணி

கூகிள் சர்ச்: ஒரு லட்சத்தை பறிகொடுத்த பெண்மணி

711
0
கூகிள் சர்ச்

கூகிள் சர்ச் செய்த பெண்மணி ஒருவர், ஒரு லட்சம் பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள சீமபுரி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், இணையதளச் சேமிப்பு (E-Wallet) பிரச்சனைகளுக்காக புகார் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்புகொள்ள நினைத்துள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றி கூகிள் வலைத்தளத்தில் தேடியுள்ளார். கூகிள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்புகொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிபோல் பேசிய நபரிடம், சேமிப்பு கணக்கு விவரங்களைக் கூறியுள்ளார். அடுத்த நிமிடமே, அவருடைய கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் காணமல்போய் உள்ளது.

அந்தப்பெண்ணிடம் பேசிய நபர் போலியானவர் என உண்மையான நிறுவனத்தைத் தொடர்புகொண்ட பிறகே தெரியவந்துள்ளது.

கூகிளில் உள்ள அனைத்துத் தகவல்களும் சரியா?

கூகிளில் உள்ள தகவல்கள் அனைத்துமே உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இல்லை. கூகிள் பயனர்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களைப் பதிவுசெய்ய முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு வங்கியைப் பற்றி கூகிளில் தேடினால் புகைப்படம், வரைபடம் (Map), தொலைப்பேசி எண், இணையதள முகவரி, அலுவலக முகவரி என அனைத்தையுமே காட்டும்.

அதில் உள்ள முகவரி தவறாக இருந்தாலோ, தொலைப்பேசி எண் செயல்படாமல் இருந்தாலோ, யார் வேண்டுமானாலும் தவறு என புகார் தெரிவிக்கலாம்.

மேலும், அந்த வங்கியின் சரியான தொலைப்பேசி எண் அல்லது முகவரி தெரியும் என்றால், அதையும் பதிவு செய்யமுடியும்.

இந்த வசதியைத்தான், அந்த மர்ம ஆசாமி தவறாக பயன்படுத்தியுள்ளான். வங்கி இணையதள முகவரியை போலியாக கொடுத்து, அதன் மூலம் உள்ளே நுழைபர்வர்களை வங்கி அதிகாரிபோல் நடித்து பணம் பறித்துள்ளான்.

இது யாருடைய தவறு?

கூகிள், இதைப்பற்றி கேள்விப்பட்டு தங்களுடைய தவறு என ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், யார் வேண்டுமானாலும் தொழில் முகவரிகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து வருகின்றது. அந்த வசதியை நிறுத்த இயலாது எனவும் கூறியுள்ளது.

கூகிள் சர்ச் கூறும் பெரும்பாலான விசயங்கள் சரியாக இருந்தாலும், சில தவறான விசயங்களும் இடம் பெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.

எல்லா வங்கிகளுமே, வங்கிக் கணக்கு விபரத்தை யாரிடமும் கூற வேண்டாம் என பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

முக்கியமாக வங்கி அதிகாரிகள், பாஸ்வேர்ட் விவரங்களை கேட்க மாட்டார்கள் எனக்  கூறியுள்ளது. அப்படியே கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றது.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இணைய அறிவு குறைவாக உள்ளவர்கள், நேரடியாக வங்கிகளுக்கே சென்று பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வது சிறந்தது.

மேலும், வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் எது எனத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

முக்கியமாக, புகார்கள் தெரிவிக்க வேண்டுமானால் நேரடியாக வங்கிகளுக்கே சென்று தெரிவிப்பது மிகவும் சிறந்தது.

நேரம் விரையமாகும் என நினைத்தால், தவறான நபர்களிடம் பணத்தைப் பறிகொடுக்கும் சூழல் உருவாகலாம்.

Previous articleஆம்பிடெக்ஸ்டிரஸ்: இவர்களைப் பற்றித் தெரியுமா?
Next articlekadhal kavithai | காதல் கவிதை – WhatsApp Love Status
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here