AMP Ads
Home ஆன்மிகம் சோழர்கள்: யார் அந்த நிசும்பசூதனி ? சோழர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

சோழர்கள்: யார் அந்த நிசும்பசூதனி ? சோழர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

1

சோழர்கள் (Chola Kingdom): யார் அந்த நிசும்பசூதனி? சோழர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? நிசும்பசூதனி கோவில் இன்றும் உள்ளதா?

நமது தமிழகத்தை ஆண்ட பேரரசர்கள் என்றாலே நம் நினைவில் வருவது சேர, சோழ, பாண்டியர்கள் தான். அதிலும் கோவில்கள் கட்டிட கலை என்றால் நாம் முதலில் கூறுவது சோழர்களாக தான் இருக்கும்.

அந்த அளவிற்கு கோவில் கட்டிட கலையில் கொடி கட்டி பறந்தவர்கள் சோழ மன்னர்கள். அதுமட்டுமின்றி வீரத்திலும், கடல் கடந்து சென்று ஆட்சிப் புரிவதிலும் வல்லமை அவர்களிடம் மட்டுமே இருந்தது.

எனவே தான் சோழ சாம்ராஜ்யம் கடாரம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, இலங்கை போன்ற தேசங்களிலும் தங்களின் ஆட்சியை நிறுவினார்கள்.

சோழ மன்னர்கள் என்றாலே கண் முன் வருவது விஜயாலயன், கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற மன்னர்கள் தான். காரணம் அவர்களின் வீர தீர செயல்களும், ஆட்சி திறமையும், கலை நயமும், அரசியல் நுணுக்கங்களும் தான்.

இவர்களின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இவர்களின் வெற்றிக்கு பின் இருந்த அந்த ஒப்பற்ற சக்தி பெண்ணாவாள். அவள் தான் சோழர்கள் குல தெய்வமாக வணங்கிய நிசும்ப சூதனி என்கின்ற அம்பாயிரம்மன்.

நிசும்பசூதனி பெயர்க் காரணம்

முன்னொரு காலத்தில் சும்பன், நிசுபன் என்ற இரு அரக்கர்கள் அரசர்களாக இருந்து மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிகளையும் துன்புறுத்தி வந்தனர்.

இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் கொற்றவையை (துர்கை) நாடினர். கௌசீகி என்ற அழகிய பெண் உருவு கொண்டிருந்த அம்பிகையை கண்டு சும்ப நிசும்பர்களின் படைவீரர்களான சண்ட முண்டர்கள் தங்கள் அரசனிடம் கூற.

அவளை அடைய வேண்டும் என்று மோகம் கொண்டு அவளை பிடித்து வர உத்தரவிட்டனர். தன்னை எவர் வெற்றி கொள்கிறாரோ அவர்களையே மணப்பேன் என்று கூறிய அன்னையிடம் சண்ட முண்டர்கள் போர்ப் புரிய துவங்கினர்.

அம்பிகை உக்ர ரூபம் கொண்டு சண்ட முண்டர்களை அழித்தாள்.
பின் வந்த தூம்ரலோசனப் படையும் துவம்சம் செய்தாள். அதன் பின் அரசுகுல அரசர்களான சும்ப நிசும்பர்களை அழித்து அனைவரையும் காத்தார்.

சும்ப, நிசும்பர்களை அழித்து வெற்றி கொண்டு “நிசும்பசூதனி” என்ற நாமம் கொண்டாள்.

சோழர்களின் குல தெய்வம்

சும்ப நிசும்பர்களை அழித்த நிசும்பசூதனிக்கு சோழர்கள் கோவில் எழுப்பி வழிப்பட்டனர் என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் கூறுகின்றன.

“தஞ்சாபுரீம் சௌத சுதாங்காராகாம
ஐக்ராஹ ரந்தும் ரவி வம்ச தீப:
தத:பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம்
சுராசுரை:அர்ச்சித பாத பங்கஜாம்
சது : சமுத்ராம்பர மேகலாம் புவம்
ரஹாஜ தேவோ தத்பராசதந”

இதன்படி சும்ப, நிசும்பர்களை அழித்த நிசும்பசூதனியை தஞ்சையில் சோழன் பிரதிட்டை செய்தான் எனத் தெரிகிறது.

“தேவர்கள் தொழும் பாதங்களை உடைய தேவியை பூசித்து நான்கு கடல்களை ஆடையாக அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை சுலபமாக ஆண்டான் சோழன்” என திருவாலங்காட்டு செப்பேடுகள் கூறுகின்றது.

கி.பி. 850 இல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார்.

அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் அமைத்தார். எப்போதும் தனக்கு வெற்றி வழங்க வேண்டும் என்று வேண்டியதும் அன்னை தோன்றி வரமளித்தார்.

அதன் பின்பு சோழ நாட்டை சுற்றி எட்டு திக்கிலும் காவல் புரிய அட்டகாளிகளை பிரதிட்டை செய்தார் என்கிறது வரலாறு. நிசும்பசூதனியை வழிப்பட்ட பின்பே ஒவ்வொரு போருக்கும் செல்வர்.

பின் சோழர்கள் திருப்புயம்போரில் பாண்டியர்கள், பல்லவர்களை வெற்றி கொண்டு சோழர்கள் பேரரசு நிற்மானம் செய்யப்பட்டது.

பின்பு வந்த அனைத்து சோழ மன்னர்களும் இராஜ இராஜ சோழன், இராஜேந்திர சோழன் என அனைவரும் போருக்கு செல்வதற்கு முன் இந்த அன்னையை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர்.

தங்கள் வெற்றிக்கு காரணமான  நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

நிசும்பசூதனி (எ) வட பத்ரகாளியம்மன் கோவில்

சோழர்கள் நிற்மானித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் ஆகும்.

இன்றளவும் பக்தர்களுக்கு பொழிவு மாறாமல் காணப்படுகிறது.
கருவறையில் அன்னை வேறெங்கும் காண முடியாத தோற்றத்தில் காட்சி தருகிறாள்.

ஏழு அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தோன்றும், பாம்புகளை கச்சையாக கட்டி தொங்கிய மார்பகங்கள், எட்டு திருக்கரங்கள், தீச்சுவாலையாக திருமுடி.

நிசும்பனின் தலை கொய்து தலைமீது அழுத்திய மெலிந்த திருவடி, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், நிசும்பனை அழிக்கும் திரிசூலம் என அசுரன் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள் அன்னை.

எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி தலையை சற்று சாய்த்தவாறு அருமையாக வடிவமைத்துள்ளனர். இங்கே வீழ்ந்து இருக்கும் நான்கு அசுரர்களும் சண்டன், முண்டன் மற்றும் சும்ப, நிசும்பர்கள் ஆவர்.

எவருக்கும் கற்பனையில் எட்டாத திருவுருவம். தேவி மகாத்மியத்தில் சும்ப-நிசும்ப வதத்தில் அன்னையின் உருவம் பற்றி கூறி இருந்தாலும். அதனை மிஞ்சும் வகையில் அமைந்துள்ள திருவடிவம் இது.

இந்த அம்பிகையே சோழர்களின் நிசும்பசூதனி. தற்பொழுது “வட பத்ரகாளியம்மன் “ என்ற பெயருடன் தஞ்சையை காவல் புரிகிறாள்.

கோர ரூபம் என்றாலும் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணைக்கடலாய் திகழ்கிறாள் அன்னை நிசும்பசூதனி.

மகிடனை அழித்த கொற்றவையின் அம்சமாக தோன்றிய நிசும்பசூதனியை இராகு காலம் மற்றும் அட்டமி நாளில் வணங்குவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

தஞ்சை சென்றால் பெரிய கோவிலை மட்டும் தரிசித்து வராமல் தவறாமல் அன்னை நிசும்பசூதனியை தரிசித்து அருள் பெற்று வருவோம்.

அமைவிடம்: அருள்மிகு வட பத்ரகாளியம்மன் திருக்கோயில், இராமசாமி பிள்ளை நகர், தஞ்சாவூர்- 631001.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version