சச்சின் டெண்டுல்கர்: ஒரு தலைமுறையின் ஆதர்ஷ நாயகன்… எண்ணற்ற நினைவலைகள் , ஏக்கம்…
சென்ற நவம்பர் 13 – 16 தேதிகளை என்னால் எளிதில் கடக்க முடியவே இல்லை… அன்று அவர் ஆற்றிய உரை, ஏப்ரல் 24 அவரது அடுத்த பிறந்த நாள்!
ஆம் அன்று தான் சச்சின் டெண்டுல்கர் 2013-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஒரு அக்மார்க் இந்தியனாக தனது நன்றி அறிவித்தலைத் துவங்கி, தனது உறவினர், அண்ணன், மனைவி, மக்கள், நண்பர்கள், சக வீரர்கள், அவரின் நிர்வாகிகள் என்று அவர் ஆற்றிய உரை உயிரை உருக்கியது…
எல்லாம் பேசி முடித்துவிட்டு எந்தன் கிரிக்கெட் வாழ்க்கை இந்த 22 அடியில் இங்கே நிறைவுறுகிறது என்று கூறிவிட்டு அந்த மும்பை வான்கடே மைதானத்தின் பிட்சை தொட்டு வணங்கிய நொடி என்னைப்போன்ற கோடிக்கணக்கான சச்சின் ரசிர்கர்கள் கதறி அழுதிருப்பர் … நான் மட்டும் என்ன விதி விலக்கா?
சச்சின் என்ன செய்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு… ஒரே வரியில் விடையே கூறமுடியாது. ஒரு காலத்தில் சச்சின் ஆட்டம் இழந்தால் இந்தியாவே ஆட்டம் இழந்தது போலத்தான்.
மிக சிறு வயதில் விளையாட வந்து மிகமிக அர்ப்பணிப்புடன் விளையாடி தொடவே முடியாத சிகரமாய் இருப்பவர் .
90 ரன் எடுத்திருக்கையிலும், நடுவர் தவறான தீர்ப்பு வழங்கினாலும் சிரித்துக்கொண்டே செல்லும் பக்குவம் உடையவர் .
எதிர் அணி பந்து வீச்சாளர்கள் விடும் வாய் சவடால்களுக்கு, தனது மட்டையை கொண்டே பதில் அளித்தவர். ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பை ஒரே ஆளாக எதிர் கொண்டவர்.
அவர் 30 வயதை நெருங்கியதும் ஆரமித்த, அவரது ஓய்வு பற்றிய பேச்சுகளை தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலமே தகர்த்தவர்.
அவர் மைதானத்தில் நின்றாலே அது நம் அணிக்கு அசுர பலம், எதிர் அணிக்கோ சிம்ம சொப்பனம்!
அதுவும் அவர் சில நேரங்களில் மட்டையை வீசும் லாவகம் மெய் சிலிர்க்க வைக்கும். அவரின் புன்னகை, கால் மட்டை சரிசெய்தல், தலைக்கவசத்தை சரி செய்தல் போன்ற சிறு சிறு உடல் மொழிகளும் அலாதி…
அளவற்ற காயங்கள் பட்டாலும் பீனீக்ஸ் பறவை போல் மீண்டு வந்தவர். கடும் முதுகு வலியுடன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் (1999) சென்னை சேப்பாக்கத்தில் அவர் அடித்த 136 மறக்கவே முடியாது…
2003-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த அடி (உலகக் கோப்பை). தனி ஒரு ஆளாக நின்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 175 ரன்கள் (ஒரு நாள் போட்டி).
தென்னாப்ரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் முதல் 200* இவையெல்லாம் வெறும் சாம்பிள் … அடுக்க ஆரமித்தால் ஒரு புத்தகமே வேண்டும் .
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் , சதங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்…
அவரின் எளிமையே அவரது அடையாளம் ! பாரத் ரத்தினா விருது பெற்றும் மிக இயல்பாக இருக்க அவரால் முடியும்… அவருக்காகவே மும்பை இந்தியன்ஸ் அணியை இன்றும் பலர் ஆதரிக்கின்றனர், அது துளியும் மிகை அல்ல. என்று காண்போம் இனி!!
சா.ரா