BharathiRaja; சென்னையில் இருந்து தேனிக்கு சென்ற இயக்குநர் பாரதிராஜா அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான தகவலுக்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னையிலிருந்து சொந்த ஊரான தேனிக்கு இயக்குநர் பாரதிராஜா புறப்பட்டுச் சென்றுள்ளார். தேனி மாவட்ட எல்லைப்பகுதியில், அவருக்கு கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதில், பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
எனினும், கொரோனா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதியான சென்னையிலிருந்து அவர் வந்துள்ளார்.
அதன் காரணமாகவே அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், அவரது வீட்டில் கொரோனா தொற்றுக்கான தகவலும் ஒட்டப்பட்டது.
இதையடுத்து, பாரதிராஜாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறித்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறித்தும் செய்தி வெளியானது.
இது குறித்து தற்போது இயக்குநர் பாரதிராஜா விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
இன்றைய செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் பாரதிராஜா தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்று செய்தி வெளியானது. ஏனென்றால், அவர்களுக்கு ஏதாவது பரபரப்பாக செய்தி வேண்டும்.
உண்மையில், என் சகோதரி உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அதற்கான அனுமதி சீட்டுடன் பல மாவட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.
இங்கு வந்து எனது சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
பல மாவட்டங்களைக் கடந்து வந்துள்ளதால், தேனி நகராட்சி சுகாதாரத்துறை அமைப்பிடம் தொலைபேசியில் பேசி நான் பல மாவட்டங்கள் கடந்து வந்துள்ளேன்.
என்னை சோதித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அவர்களும் வந்து சோதனை செய்தார்கள்.
தற்போது வரை சென்னையில் ஒரு முறை, ஆண்டிபட்டியில் ஒரு முறை மற்றும் தேனியில் ஒரு முறை என்று மொத்தம் 3 முறை பரிசோதனை மேற்கொண்டுள்ளேன்.
மூன்று முறையுமே நெகட்டிவ் தான் வந்தது. என்னுடன் வந்த 2 உதவியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. நாங்களே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். இதுதான் நடந்தது.
இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் சந்தோஷமாக நலமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.