கோதுமைக்குள் ரூ.15000: ஏழை மக்களுக்கு கொடுத்த அமீர் கான்? டெல்லியில், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் கோதுமை பாக்கெட்டுக்குள் மறைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை அமீர் கான் அனைவருக்கும் கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு கோதுமை பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை நடிகர் அமீர் கான் வழங்கியதாக தகவல் வெளியாகி வருகிறது.
நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மட்டும் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோ பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர் அமீர் கான் பிரதமர் மோடியின் கேர்ஸ் நிதி, மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதியில் தனது பங்களிப்பை முன்னரே வழங்கியுள்ளார்.
மேலும் தனது வரவிருக்கும் திரைப்படமான லால் சிங் சத்தாவின் தினசரி கூலி தொழிலாளர்களுக்கும் நிதியுதவி அளித்து ஆதரித்தார்.
இந்த நிலையில், தற்போது ஊடகங்களில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், அவர் கோதுமை பாக்கெட்டுடன் சேர்த்து ரூ.15 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.
கடந்த 23 ஆம் தேதி, டெல்லியில், உள்ள ஏழை, எளிய் மக்களின் வாழுமிடத்திற்கு சென்று இரவு நேரத்தில் லாரியில் ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகளை தேவைப்படுவோருக்கு கொடுத்துள்ளனர்.
அந்த கோதுமை மாவு பாக்கெட்டுகளை பெற்று வீட்டிற்கு சென்று அதனை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அதில், ரூ.15 ஆயிரம் ரூபாய் பணமிருந்துள்ளது.
நடிகர் அமீர் கான் தான் சத்தமே இல்லாமல், ஏழை, எளிய மக்களுக்கு இவ்வாறு உதவி செய்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.
ஆனால், உண்மையில், ஜமான் என்ற இளைஞனின் டிக் டாக் வீடியோவிலிருந்து இந்த சர்ச்சை வந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த வீடியோவில், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஒரு சேரியில் நின்றுகொண்டிருக்கும் லாரிக்கு அருகில் ஒருவர் சென்றுள்ளார். கோதுமை மாவு ஒரு கிலோ வழங்கப்படும் என்று அவருக்கு கூறப்பட்டிருக்கிறது.
இரவில் ஒரு கிலோ கோதுமைக்கு யார் வரிசையில் நிற்பார்கள்? என அவரும் அவருக்குப் பின்வந்த பலரும் அங்கிருந்து நகர்ந்திருக்கிறார்கள்.
மிகவும் மோசமான பொருளாதார குடும்ப சூழலில் உள்ள ஆண்கள் மட்டும் மாவு பாக்கெட்டுகளை வாங்கி வீட்டுக்குச் சென்று உள்ளே திறந்து பார்த்திருக்கிறார்கள்.
அதில் ரூ.15,000 இருந்திருக்கிறது. மிகவும் தகுதியானவர்களுக்கு சரியான உதவி வழங்கப்பட்டது.
அவரது உதவிக்காக நான் அவரை பாராட்டுகிறேன்,” என்று ஜமான் வீடியோவில் கூறினார். ஆனால் அது யார் என்று வீடியோவில் அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும், இது அமீர் கானின் விநியோகம் தான் என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆனால், அமீர் கான் தரப்பு அப்படி ஏதும் கோதுமை பாக்கெட்டை விநியோகிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.