Sonu Sood; நிஜத்தில் ஹீரோ: பஸ் வசதி செய்து கொடுத்த வில்லன் நடிகர்! வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தனது சொந்த செலவில் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வில்லன் நடிகர் சோனு சூட் பஸ் வசதி அமைத்துக் கொடுத்துள்ளார்.
கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக வருமானமில்லாமல் தவிக்கும் மக்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி என்று பல படங்களில் வில்லன் நடிகராக நடித்த சோனு சூட் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.
ஆம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மும்பையிலிருந்து கர்நாடகா செல்வதற்கு பஸ் வசதி செய்து கொடுத்துள்ளார்.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இரு மாநில அரசுகளிடமும் முறையான அனுமதி பெற்று தனது சொந்த செலவில் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார்.
சோனு சூட்டின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்கு மும்பையில் உள்ள தனது 6 மாடி ஸ்டார் ஹோட்டலை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் படங்களில் வில்லனாக நடித்தாலும், அவருக்குள்ளும் மனிதாபிமானம் இருக்கத்தான் செய்கிறாது. படங்களில் வில்லனாக இருந்தாலும், நிஜத்தில் ஹீரோவாகிவிட்டார்.