பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் பர்த்டே டுடே! மலையாளத்தில் வந்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மடோனா செபாஸ்டியன் இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மடோனா செபாஸ்டியன் பிறந்தநாள் இன்று.
கேரளா மாநில கண்ணூரில் பிறந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். வணிகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக இசையமைப்பாளர்களான தீபக் தேவ் மற்றும் கோபி சுந்தர் ஆகியோரது இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார்.
மியூசிக் மஜோ என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியுள்ளார். இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்து சூர்யா தொலைக்காட்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வந்துள்ளார்.
இந்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதைப் பார்த்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், தனது அடுத்த படத்தின் ஆடிஷனுக்கு அழைத்துள்ளார்.
நடிப்பு மீது ஆர்வம் இல்லையென்றாலும், ஆடிஷனுக்கு சென்றுள்ளார். அப்போது தான் மேரியின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். செலின் ரோல் அவருக்கு கொடுக்கப்பட்டது.
பிரேமம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில், விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
இப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்தார். கிங் லியர் என்ற படம் அவருக்கு நல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்தது.
பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் மடோனா செபாஸ்டியன் நடித்தார். தொடர்ந்து கவண், பா பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும் ஆகிய தமிழ் படங்களிலும், இப்லிஸ், வைரஸ், பிரதர்ஸ் டே ஆகிய மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது சசிகுமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம்டா என்ற கிராமத்து கதை கொண்ட படத்தில் பாவாடை தாவணியில் கலக்கி வருகிறார். கோட்டிகப்பா 3 என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மடோனா செபாஸ்டியன் இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.