S.A. Chandrasekar; விஜய்யை தொடர்ந்து பாசமான பிள்ளைகளுக்கு வேண்டுகோள் வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்! இயக்குநரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.
மகன் விஜய்யைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். தனது மகன் தளபதி விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்தவரும் இவரே.
அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, சாதிக்கொரு நீதி, நெஞ்சில் துணிவிருந்தால், சாட்சி, குடும்பம், நீதியின் மறுபக்கம் என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 70 படங்கள் வரை இயக்கியுள்ளார். இதில், பெரும்பாலான படங்கள் சமூக அக்கறை கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். மேலும், படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் நாளை தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக, ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காரணமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளன்று வந்து வாழ்த்திவிட்டு செல்வீர்கள்.
ஆனால் இந்த ஆண்டு கண்ணுக்குத் தெரியாத ஒரு விரோதி (வைரஸ்) உலகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறது.
அனைவருமே கஷ்டத்தில் இருக்கிறோம். ஆகையால், உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆதலால், இந்த வருடம் யாரும் வர வேண்டாம். உங்களது குடும்பத்தினருக்கு நீங்கள் ரொம்பவே முக்கியம். உங்களுக்கு குடும்பம் முக்கியம். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.