பட ரிலீசுக்கு முன்பே அண்டா அண்டாவாக பால்: சிம்பு ரசிகர்கள் அட்டகாசம்
சிம்பு, சில நாட்களுக்கு முன்பு என் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்த நினைக்கிறார் சிம்பு. ரசிகர்களே இல்லாத நிலையில் யார் இவருக்கு பாலாபிஷேகம் செய்யப்போகிறார்கள்.
இப்படி பலர் சிம்புவைக் கலாய்த்து தள்ளினர். வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல், மீண்டும் சிம்பு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
ரசிகர்கள் அனைவரும் என் பேனருக்கு அண்டா அண்டாவாகப் பால் ஊற்றவேண்டும். ரசிகர் பலத்தை இந்த உலகுக்கு புரியவைக்க வேண்டும் என மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
நல்லது சொல்லும்போது வாய்திறக்காதவர்கள் கூட, பால் ஊற்றச்சொன்ன சிம்பு மீது ஆத்திரமடைந்தனர்.
சிம்பு ரசிகர்கள் பட ரிலிசின்போது பால் பாக்கெட்டுகளைத் திருடினாலும் திருடுவார்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் என பால் முகவர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியானது.
தற்பொழுது, வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் பிப்ரவரி 1 அன்று வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பொழுதே படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் சிம்பு பேனர்களை வைத்து பால் ஊற்றியுள்ளனர் திருச்சியைச் சேர்ந்த சிம்பு ரசிகர்கள்.
கட்டவுட், பாலபிஷேகம் இதுபோன்ற கலாச்சாரம் தற்பொழுது தான் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் சிம்புவின் தூண்டுதல் மீண்டும் இதற்கு அடித்தளமிட்டுள்ளது.
வரும் நாட்களில் சிம்புவின் போட்டி நடிகர்கள், தங்களின் ரசிகர் படைபலத்தை காண்பிக்க வேண்டும் என ரசிகர்களைத் தூண்டிவிட வாய்ப்புண்டு.
இதனால் பாதிக்கப்படப்போவது ரசிகனும் ரசிகனுடைய பணமும் தான். எத்தனையோ குழந்தைகள் அனாதை இல்லத்தில் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவதற்குப் பதில், அந்த பாலை அனாதை இல்லங்களுக்கு தானமாக வழங்கினால் கூட பல ஏழைக்குழந்தைகள் பசியாறும்.