Visu Died; ஒரே வாரத்தில் அடுத்தடுத்து துயரம்: சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி! ஒரே வாரத்தில் சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஒரே வாரத்தில் அதுவும் 4 நாட்களில் சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து மறைந்தது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசு மறைவு
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை வகுத்துக் கொண்டவர் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் விசு. கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.
திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக, மேடை நாடகங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் வந்த படங்கள் பெரும்பாலும், சமூக, குடும்பக்கதையை மையப்படுத்தியே திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பதில், இவரை மிஞ்ச யாருமில்லை.
குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதே போன்று கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநரானார்.
1977 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் கால்பதித்து வந்தார். விசு, தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என்று பல திறமைகளை கொண்டவராக திகழ்ந்துள்ளார்.
விசு இயக்கத்தில் வந்த சம்சாரம் அது மின்சாரம் படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு பிலிம் பேர் விருது கிடைத்தது.
இந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக கடந்த 22 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 74. விசு உயிரிழந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேதுராமன் மறைவு
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம், அதன் பிறகு விசு மறைவு என்று அடுத்தடுத்து அதிர்ச்சிதரும் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த துயரிலிருந்து மீள்வதற்குள் ஒரு வாரத்தில் அதுவும் 4 நாட்களில் மற்றொரு சினிமா பிரபலம் சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 36. சேதுராமன் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தோல் நோய் (Dermatology) பிரிவில் மருத்துவம் படித்த சேதுராமன், கடந்த 2016 ஆம் ஆண்டு ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி இரண்டாவது முறையாக ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை சென்னை அண்ணா நகரில் திறந்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தைத் தொடர்ந்து, வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 50/50 என்ற படமே சேதுராமனுக்கு கடைசி படமாக அமைந்துள்ளது.
ஒரு மருத்துவர் என்பதால், கொரோனா வைரஸ் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார். சேதுராமனின் திடீர் மறைவு கோலிவுட் பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, சேதுராமனின் இறுதிச் சடங்கில் பிரபலங்கள் கலந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விசுவிற்கும் இதே நிலை தான் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சேதுராமன் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் டுவிட்டர் வாயிலாக கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.