உலகப் பொதுமறை திருக்குர்ஆன் பற்றி தெரிந்துகொள்வோம். திருக்குர்ஆன் எப்படி பெயர் வந்தது? குர்ஆனின் சிறப்புகள் என்ன? திருக்குர்ஆனின் முதல் வசனம் எப்போது உருவானது?
உலகில் மிக அதிகமாக படிக்கப்படும் நூல்களில் முதன்மையான இடத்தை வகிப்பது இறுதி வேதமான திருக்குர்ஆன் ஆகும்.
மத ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் முஸ்லிம்களாலும் முஸ்லிம் அல்லாதவர்களாலும் திருக்குர்ஆன் அதிகமாக படிக்கப்படுகின்றது. திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல மாறாக உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் சொந்தமானது.
அரசியல், பொருளியல், இல்லற இயல் போன்ற எல்லாவிதமான சட்டங்களையும் உள்ளடக்கிய தலைசிறந்த சட்டத் தொகுப்பு நூல் இந்த திருமறை குர்ஆன்.
திருக்குர்ஆன் மனிதர்களால் எழுதப்பட்ட கவிதை நூல் அல்ல மாறாக கவிதையில் காணப்படும் இலக்கியத்தையும் வென்றுவிடும் இறைவேதம் ஆகும்.
பெயர்க்காரணம்
திருக்குர்ஆனுக்கு ‘அல்குர்ஆன்’, ‘அல் ஃபுர்கான்’, ‘அத்திக்ர்’, ‘அல் கிதாப்’, ‘அத் தன்ஸீல்’ என்று ஐந்து பெயர்கள் உள்ளன.
இவைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது அல்குர்ஆன் என்ற பெயர்தான். குர்ஆன் என்ற வார்த்தைக்கு ‘ஓதப்படக்கூடியது’ என்று பொருள்.
குர்ஆனின் சிறப்புகள்
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.” -புகாரி
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் (யுகமுடிவு நாள்) அதை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யும்.” – முஸ்லிம்
குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார்கள்; ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தார்கள்; கடவுளை நிர்வணமாக வழிபட்டனர்.
பெண் குழந்தைகள் பிறப்பதை கேவலமாகக் கருதி, அதை உயிருடன் புகைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
மது பானங்கள் அருந்தினார்கள், காம களியாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள்; பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சாதி வேற்றுமை பரவலாக இருந்தது.
தன் சமுதாயத்தின் இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், தம் சமுதாய மக்கள் மிகப்பெரிய வழிகேட்டில் இருப்பதை உணர்ந்தார்கள்.
எனவே, தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ஹீரா எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொண்டார்கள்.
பல நாட்களுக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். இவ்வாறு குகையில் இருந்த ஒரு நாள் தான் வானவர் ஜிப்ரீலை கண்டார்கள்.
வானவர் ஜிப்ரீல் அவர்கள் முஹம்மத் நபி அவர்களிடம் “படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக” என்று கூறினார்கள். இதுவே திருகுர்ஆனின் முதல் வசனம். இந்நிகழ்வு நடந்தது கிபி 610ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்.
மனிதகுல வழிகாட்டியான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனித ரமலானை அடைந்திருக்கும் நாம், குர்ஆனை படித்துணர்ந்து, அதன்படி வாழ்வை அமைத்துக் கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருபபொருத்தத்தை அடைய வேண்டும்.