இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து தரவரிசை முன்னேற்றம்
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் விளையாடி வந்த நிலையில், வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்று தன்னுடைய பலவீனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.
அணி தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 116 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ள நியூஸிலாந்து 110 புள்ளிகளும், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும், 105 புள்ளிகள் இங்கிலாந்து, 98 புள்ளிகள் தென்ஆப்பிரிக்கா அணி 4 மற்றும் 5-வது இடங்களில் இருக்கிறது.
முதலிடத்தை இழந்த விராட்
விராட் கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பியதால் அவரும் தன்னுடைய முதல் இடத்தை பறி கொடுக்க நேரிட்டது.
பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 906 புள்ளிகளுடன் வீராட் கோலி 2-வது இடத்திலும், 853 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சனும், நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் மார்க்கஸ் லபுசேனே மற்றும் பாபர் அசாம் உள்ளனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிபில் நியூசிலாந்து
இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 180 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 2 டெஸ்டுகளிலும் வென்றதன் மூலம் அந்த அணிக்கு 120 புள்ளிகள் கூடுதலாகக் கிடைத்தன.
இந்த புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் 360 புள்ளிகளுடன் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட்
இந்திய அணி இனி ஆறு மாதத்திற்கு பிறகு தான் தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட உள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா தொடரில் ஒரு போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.