Movie Review Ratsasan | ராட்சசன். கொடூரக் கொலை பாக்குறவங்க… நோ நோ. திரில்லர் படம் பாக்குறவங்க, சீரியல் கில்லர் படம் பாக்குறவங்க கண்களுக்கு விருந்து.
படம் ஆரம்பமான வேகத்தில் பரபரப்பாக செல்கிறது. அதே வேகத்திலேயே மெர்சலாக முடிகின்றது. படத்தை மெருகேற்றும் விதமாக இசையும், சண்டைக் காட்சிகளும் அமைந்துள்ளது.
ஏற்கனவே நிறைய சீரியல் கில்லர், சைக்கோ சீரியல் கில்லர் படங்கள் வந்துவிட்டது. அதையும் மீறி படத்தை பரபரப்பு திரைக்கதையுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்குமார்.
கதைச் சுருக்கம்
படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு, இயக்குனராக வேண்டும் என்பதே ஆசை. அவருடைய சைக்கோ கில்லர் கதையை யாரும் தயாரிக்க முன்வரவில்லை.
வேறு வழியில்லாமல் அப்பா மூலம் கிடைத்த போலீஸ் கோட்டாவில், எஸ்.ஐ.யாக பணியில் சேருகின்றார். அப்போது சைக்கோ கில்லர் கொலை நடக்கிறது.
ஏற்கனவே இவர் படத்திற்காக திரட்டி வைத்திருந்த தகவல், அந்தக் கொலையை கண்டுபிடிக்க உதவுகின்றது. இதுதான் படத்தின் கதைச் சுருக்கம்.
படம் எப்படி
பழைய கதை என்றாலும், பக்கா என்டர்டெயின்மென்ட். ஆர்ட் டைரக்டரை சும்மா சொல்லக்கூடாது. எங்கங்க பேப்பர் கட்டிங் உருவனுமோ உருவி, ரூம் ஒன்ன ரெடி பண்ணி குடுத்துட்டார்.
இதெல்லாம் எத்தனையோ படத்துல பாத்தாச்சு, இருந்தாலும் இவங்க எங்கபோய், புதுசுபுதுசா பேப்பர் கட்டிங் கொண்டு வராங்கன்னு தான் தெரியலை. இதுபோன்ற படத்துக்காகவே, நிறைய சேகரிச்சு வச்சிருப்பாங்கபோல.
விஷ்ணுவிஷாலின் படத்தேர்வு சிறப்பு. சும்மா நாலு மொக்கப்படம் நடிச்சோம். கல்லா கட்டுனோம்னு இல்லாம, படம் பாக்க வாரவங்களுக்கு தலைவலி இல்லாத கதையா, செலக்ட்பண்ணி நடிப்பதற்கே பாராட்டனும்.
அமலாபால் தேவையே இல்லை. இருந்தாலும் கொஞ்சம் கிளுகிளுப்பு காட்ட அப்பப்போ யூஸ் பண்ணிருக்காங்க. அப்டி ஒன்னும் பெருசா இல்லனாலும், சிறுசா ஒர்க் அவுட் ஆயிருக்கு.
சைக்கோ மனிதன், கொடூர கொலை செய்வதை கடைசிவரை காட்டவே இல்லை. பின்பக்கம் இருந்த குழந்தை, வில்லன் என்ட்ரியில் கண்ணா மூடிச்சு, கடைசிவரை கண்ணத் தொறக்கவே இல்லையே.
இதுல கொடூரக் கொலைய வேற காட்டுனா அவ்ளோ தான். படம் பாக்க வந்தவன் பாதிலயே ஓடிருவான். அந்த அளவுக்கு கொடூர முகம் கொண்ட வில்லன்.
பலஇடங்களில் நமக்கே ஒருவித படபடப்பு தொற்றிக்கொள்கிறது. இறுதிவரை அந்த பீல்லயே திரைக்கதை செல்கிறது. குத்துசாங்கு, லவ்சாங்கு போட்டு சாவடிக்காம நச்சுன்னு திரைக்கதை அமைச்சிருக்காறு இயக்குனரு.
குறைகள்
படத்தில் குறைகள் என்றால், லேடி போலீஸ் தான். அந்த மூஞ்சிய பாத்தாலே எரிச்சல் வருது. அந்த அளவுக்கு அந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.
இருந்தாலும் ஒரு சீரியல் கொலை நடக்கும் இடத்தில், இந்த அளவிற்கு கவனக்குறைவாக ஒரு அசிஸ்டன்ட் கமிஷ்னர் செயல்படுவாரா என்பது சந்தேகமே.
சைக்கோ ஆசிரியர். அவர ஓப்பனிங் காட்டுனதுமே, இந்த பீஸ் கொலை பண்ணுற அளவு ஒர்த் இல்லைன்னு நமக்கே தெரிஞ்சிடும். இருந்தாலும், இந்த பீஸ்தான் கொலை பண்ணிச்சுன்னு ஒரு நிமிஷம் நம்ப வச்சு ஏமாத்திட்டாரு இயக்குனர் .
சில காட்சிகள் யூகிக்கும் அளவுக்கு இருந்தாலும், சண்டைக்காட்சிகள் நம்மை படத்தோடு ஒன்றச்செய்கிறது. ஒளிப்பதிவு இல்லாமய, அதுவும் சிறப்பு. ஒளிப்பதிவு ஒழுங்கா இல்லன இந்த மாதிரி படத்தை எப்படி ரசிக்க முடியும்.
மொத்தத்தில் ராட்சசன் ரண கொடூரன்…