Na Muthukumar: நா. முத்துக்குமார் இதுவரை நேரிலே நாம் பார்த்திராத ஒருவர், ஒரு வார்த்தை கூட பேசிடாத ஒருவர் நாம் பழகிய நபராகவோ நம்மில் ஒருவராகவோ தோன்றுகிறார் என்றால் அது சற்றே பிரம்மிப்பான உணர்வாக இருக்கும்.
திரைப்பிரபலங்களை எடுத்துக்கொண்டால், தினமும் திரையில் பார்க்கிறோம் அவர்களின் படைப்புகளை ஏதோ ஒரு வகையில் நாம் அனுகி கொண்டே இருக்கிறோம். இருப்பினும் வெகுசிலர் மட்டுமே “அட! இவர் நமநம்மில் ஒருவர் போல” என்ற உணர்வை நம்மில் உருவாக்குவார்கள். அப்படியொருவர்தான் நா.முத்துக்குமார்.
எளிமை:
பொதுவாகவே கவிஞர்களும் எழுத்தாளர்களும் எளிதில் ‘நம்மில் ஒருவர்’ என்ற எண்ணத்தை உருவாக்கினாலும், அண்ணன் நா.முத்துக்குமார் சற்றே அதிகமாக நம்முடன் நெருங்கி வருகிறார் அதற்கு ஆதியான காரணம் அவரின் பாடல் வரிகள்தான்.
நமக்கு தெரிந்த சொற்களால் அன்பு, வாழ்க்கை, நட்பு, காதல், உறவுகள், காமம், துயரம், கொண்டாட்டம் என எல்லா வகை உணர்வுகளிலும் தனது எளிய வரிகளால் நம்மை அண்ணன் நா.முத்துக்குமார் நெருங்கி வந்து கொண்டே இருக்கிறார்.
அவர் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளும் பொழுதில் நாம் அவரின் வரிகளால் நம் உணர்வை கண்ணீராக புன்னையாக காதலாக கொண்டாட்டமாக ஏதேனும் ஒரு சாயலில் மாற்றி அதனுள் முழ்கிப்போகிறோம்.
“Beauty lies on simplicity” என்கிற பழமொழியை தன் எழுத்து வாழ்வில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் கடைபிடித்து வந்திருக்கிறார்.
அது அவரின் எழுத்துக்களின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. அந்த எளிமைதான் ரசிகனுக்கும் கலைஞனுக்கும் இடையில் இருக்கும் கதவை தகர்த்தெறிந்தது.
காதல் பிரிந்து சென்றால் இருக்கும் வெறுமையை ‘தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ’ என்ற ஒற்றை வரியில் சொல்லியருப்பதும் இவரின் எளிமை வரிக்கு ஒரு சான்று!
வித்தைக்காரர்:
நாஸ்டாலாஜியாக்களை தூண்டி விடுவதில் நா.முத்துக்குமார் எப்போதும் எனக்கு வித்தைக்காரராகவே தெரிவார்.
‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி’ என்ற பாடலின் ஒட்டுமொத்த வரியையும் உதாரணமாக அதற்கு சொல்லலாம். காக்கா முட்டை திரைப்படத்தில் வரும் ‘செல் செல்’ பாடலில் வரும் வரிகளும் உதாரணம்தான். ‘குவாட்டர் பாட்டிலை
விளக்காய் மாற்றி இருட்டை ஓட்டிடுவோம்’ என்ற ஒற்றை வரியில் நான் என் நாஸ்டாலஜியாவுக்குள் சென்று அங்கிருந்து அந்த முழுப்பாடலையும் என் குழந்தை பருவத்தை ஓடவிட்டு அதனுடன் பொருத்தி பார்ப்பதுண்டு. இவ்வாறு குழந்தை பருவம் மட்டுமல்ல நம் முந்தைய காதல்கள் நட்புகள் காலங்கள் என அனைத்தையும் தன் பாடல் வரிகள் மூலம் நம்மை உணரச்செய்வதில் இவர் கைதேர்ந்தவர்.
ஆறுதலும் நீயும்:
மனதை ஆறுதல் படுத்துவதற்கென இவரின் சில பாடல்களை பலர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதை நான் பலமுறை கவணித்ததுண்டு. கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் “பற பற பட்டாம்பூச்சி” பாடல்.
புதுப்பேட்டை ஆல்பத்தில் வரும் “ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது” பாடல். காதல் கொண்டேனில் ஒலிக்கும் ‘நெஞ்சொடு கலந்திடு’. தங்க மீன்களில் வரும் ‘நதி வெள்ளம் ‘பாடல்.
தரமணியில் ஒலிக்கும் ‘ யாரோ உச்சிக்கிளை மேலே’ மற்றும் ‘மண்ணிப்பாயா’ பாடல். இந்த லிஸ்ட்டை நீட்டிக்கொண்டே செல்லுமளவிற்கு நா.முத்துக்குமார் அவர்கள் நம்மை நம் துயரங்களில் இருந்து ஆறுதல் படுத்துவதற்காக பல வரிகளை தந்து சென்றிருக்கிறார்.
உங்கள் பாடல்களும்
உங்கள் கவிதைகளும்
உங்கள் கதைகளும்
இன்னமும் எங்களை பிரம்மிப்படைய செய்து கொண்டுதானிருக்கிறது. எங்களை எங்கள் துயரங்களில் இருந்து மீட்டெடுத்து கொண்டுதானிருக்கிறது. எங்களின் கொண்டாட்த்தில் பாடு பொருளாக இருந்துகொண்டுதானிருக்கிறது.
மறைந்தாலும்
உங்களை மறக்காமல் இருக்கும் ரசிகர்களும் தம்பிமார்களும்
மற்றைய நாட்களை விட
உமது பிறந்தநாளாகிய இன்று
உன்னை அதிகம் நினைவுகூறுகிறோம்
சற்றே கனத்த மனதுடன்!