ரஜினியிடம் இல்லை, விஜய்சேதுபதியிடம் இருக்கு!
ரஜினிகாந்த், விஜய் சேதுபதிக்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். சொந்தப் படம் எடுக்க வேண்டாம். நிறைய பட்ஜெட் செலவு செய்ய வேண்டாம் என ஆலோசனை கூறியுள்ளார்.
ரஜினியின் ஆலோசனைப்படி, விஜய்சேதுபதி படம் தயாரிக்கும் முடிவை கைவிட்டுவிட்டார். இதனால் எஸ்.பி.ஜனநாதன் படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
ரஜினி, விஜய்சேதுபதியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. பத்திரிக்கையாளர்களை எப்படி எதிர்கொள்வது? என விஜய்சேதுபதியிடம் கற்கவேண்டும்.
ரஜினியின் அரசியல் எதிர்காலத்திற்கு, முதல் தகுதி இதுவும் ஒன்று. சமீபகாலமாக, செய்தித் தொலைக்காட்சிகள் பெருகிய வண்ணம் உள்ளன. இதனால் டி.ஆர்.பி. போட்டி ஏற்பட்டுள்ளது.
இவர்களிடம் எக்குத்தப்பாக பேசி சிக்கிக்கொண்டால், அன்றைக்கு அந்த நபர் பலியாடு. ரஜினி, பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போதெல்லாம் எசக்குபிசக்காக எதையாவது பேசி மாட்டிக்கொள்கின்றார்.
அதேநேரத்தில், சமீபத்தில் விஜய்சேதுபதி, பத்திரிக்கையாளர் ஒருவரை லாவகமாக எதிர்கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியிடம், வாயை புடுங்க வேண்டும் என அந்தப் பத்திரிக்கையாளர் முறை தவறி நடந்துகொள்கின்றார். அவருடைய நோக்கத்தைப் புரிந்துகொண்ட விஜய்சேதுபதி, அவேசப்பட்டு வார்த்தைகளைவிடாமல் லாவகமாக சமாளிக்கின்றார்.
ரஜினி மட்டுமல்ல பல அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கப் பயப்படுகின்றனர். காரணம், அவர்களிடம் சொல்வதற்கு விஷயம் இல்லை. விஷயம் இருந்தாலும், பேசுவதற்கு தைரியம் இல்லை.
ஒரு சிலர், பேச வேண்டும் என எதையாவது பேசி மாட்டிக்கொள்வார்கள். அதேபோல், பத்திரிக்கையாளர்களின் தாக்குதல் கேள்விகளால் ஆத்திரம்கொள்வார்கள்.
பிரபலங்களாக மாறிவிட்டால், பத்திரிக்கையாளர்களை சமாளிக்கும் பக்குவம் வேண்டும். இல்லையெனில், நடுநிலை ஊடகங்கள் என அடையாளப்படுத்திக்கொள்ளும், டி.ஆர்.பி. பேர்வழிகளிடம் சிக்கிக்கொள்ள நேரிடும்.