Home ஆன்மிகம் வாலையம்மன்: சித்தர்களின் ரகசிய பெண் தெய்வம் வழிபாடு

வாலையம்மன்: சித்தர்களின் ரகசிய பெண் தெய்வம் வழிபாடு

1
1437
வாலைப் பெண் தெய்வம் சித்தர்களின் ரகசிய பெண் தெய்வம் வழிபாடு

வாலையம்மன்: சித்தர்களின் ரகசிய பெண் தெய்வம் வழிபாடு. யார் அந்த வாலையம்மன்? வாலைப் பெண் தெய்வம் எனப்படும் பாலாவின் சிறப்பு என்ன? சித்தர்கள் எவ்வாறு பூஜித்தனர்?

அண்டமெல்லாம் விளங்கும் ஒப்பற்ற சக்தியாக இருக்கக் கூடிய அன்னை பராசக்தியின் பல்வேறு ரூபங்களை நாம் பூஜித்து வருகிறோம்.

இருப்பினும் நமது செந்தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வாழ்ந்து கொண்டும் இருக்கின்ற சித்த புருஷர்கள் இறை நிலையை அடைய யோக முறைகளையும், பூஜை முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

சிவ வழிபாடு அனைத்து சித்தர்களும் செய்து வந்தது நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும் அந்த சித்த நிலையை அடைய வேண்டிய சக்திகளை பெறுவதற்கு சில இரகசிய வழிபாட்டு முறைகளை செய்து வந்துள்ளனர்.

அப்படி அவர்களின் வழிபாட்டில் இருந்த ஒப்பற்ற சக்திகளை வழங்கிய வழிபாடே “வாலையம்மன்“ (பாலா) வழிபாடு ஆகும்.

காளி ஞானத்தின் வடிவமா? காளி வழிபாடு எப்படி தோன்றியது?

யார் இந்த வாலைப் பெண் தெய்வம்?

நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள பிள்ளைத் தமிழ் பருவங்களில் “வாலை பருவம்” ஒரு பருவம் உண்டு. ஒன்பது வயது நிரம்பிய பெண் குழந்தையை வாலை என்று கூறுவர்.

இந்த வாலையம்மன் வழிபாடும் சிறு பெண் குழந்தை வழிபாடே ஆகும். பெண்மை என்றாலே சக்தி, வீரம், ஞானம், தாய்மை, கருணை என அனைத்து குணங்களும் நிரம்பியிருக்கும்.

பெண் குழந்தை என்றாலே அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை வழங்கும். இதனை தான் பாலாவும் செய்கிறாள்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது தன் படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத் தளபதியாக மாதங்கி மற்றும் வாராகியை வைத்து யோகினி சேனைகளுடன் சென்று போர்ப்புரிந்தாள்.

முதலில் போருக்கு வந்த பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க லலிதா தன்னுள் இருந்து ஒரு சிறு பெண்ணை தோன்றச் செய்து அனுப்பி வைத்தாள்.

அக்குழந்தையும் அனைவரையும் மாய்து வெற்றியுடன் திரும்பியது. அச்சிறு குழந்தை தான் பாலாம்பிகை.

இவளே வாலாம்பிகை, வாலையம்மன், அசோக சுந்தரி, பாலா திரிபுரசுந்தரி, பாலா என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள்.

வாலையம்மன் சிறப்புகள்

வாலையம்மன் (பாலா) சின்னஞ்சிறு குழந்தையாவாள். இவள் குணங்களும் குழந்தைத் தனமாகவே இருக்கும்.

குழந்தையை கொஞ்சி அழைத்தவுடன் ஓடி வருவது போல ஓடி வருபவள். இவளின் வடிவாமானது சொல்லுதற்கரிய பேரழகு பொருந்திய ஒன்பது வயது குழந்தையாகும்.

கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன் பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பவள். ஞானமே வடிவாக இருப்பவள் ஆவாள். ஸ்ரீ சக்ர வடிவமானவள், ஸ்ரீபுரத்தில் அன்னை லலிதாவுடன் எப்போதும் இருப்பவள்.

இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம், வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.

இவளைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் லலிதா மகாத்மியத்தில் 26-ஆம் அத்தியாத்தில் விரிவாகக் கூறியுள்ளனர்.

சித்தர்களின் வாலை வழிபாடு

இந்த வாலாம்பிகை வழிபாடானது சித்தர்களின் வழிபாட்டில் பெரிய ரகசியங்களை கொண்டதாகும். யோக முதிர்ச்சி, சித்துக்களில் கைதேர்ந்த சித்தர்கள் அனைவரும் வாலையின்றி அந்நிலையை அடைய இயலாது.

இதனை வாலை கொம்மி போன்ற பாடல்களில் சித்தர்களே உணர்த்தி உள்ளனர். கொங்கணவர் தனது வாலை கொம்மியில்,

“வீணாசை கொண்டு திரியாதே இது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே”

என்ற பாடலின் மூலம் வாலையை கண்டு வணங்கினால் ஆகாயத்தை கூட ஆளலாம் என்று எடுத்துரைக்கிறார். மேலும் கருவூராரும் வாலையை போலே ஒரு தெய்வம் இல்லையென கூறியுள்ளார்.

சித்தர்களின் முதல்வரான அகத்தியரும் லலிதா சகஸ்ரநாமத்தில் “பாலா லீலா வினோதினி” என்று இவளை குறிப்பட்டுள்ளார். திருமூலர், போகர் என அனைத்து சித்தர்களும் வாலையம்மனை வழிபட்டுள்ளனர்.

இந்தக் குழந்தையை வழிபட்டு தான் சித்தர்கள் சித்திகளை பெற்றனர் என்பது நமக்கு தெளிவாகிறது.

vasantha navaratri: இராமர் விரதமிருந்த வசந்த நவராத்ரி

பாலா மூல மந்திர ஜெபம்

பாலா மூல மந்திர ஜெபம் பாலாம்பிகை கோவில்கள் வாலையம்மன்

பாலா பரபிரம்மத்தை காண நம்மை கைப்பிடித்து அழைத்து செல்பவள். இவளை மூல மந்திரங்கள் மூலம் ஜெபம் செய்ய சீக்கிரமே நம்வசப்படுபவள்.

மூன்று வித மான மூல மந்திரத்தின் மூலம் இவளை துதிக்கின்றனர்.

பாலா திரியட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌம்” என்ற மந்திரம் பாலாவின் மூல மந்திரம் ஆகும்.

ஐம் என்பது பிரம்மா, வாணி பீஜம் ஆகும். க்லீம் என்பது விஷ்ணு, லட்சமி மற்றும் காளி பீஜமாகும்.

சௌம் என்பது சிவன், சக்தி மற்றும் முருகன் பீஜமாகும். எனவே பாலாவை இம்மந்திரத்தால் வழிபட கல்வி, செல்வம், வீரம் என அனைத்தும் கிடைக்கும்.

பாலா சடாட்சரி மூல மந்திரம்

ஓம் ஐம் க்லீம் சௌம்

சௌம் க்லீம் ஐம்”

திரியட்சரி மூல மந்திரம் பலித்தமான பின்பு சடாட்சரியால் வழிபடலாம்.

பாலா நவாட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌம்

சௌம் க்லீம் ஐம்

ஐம் க்லீம் சௌம்”

சடாட்சரி மூல மந்திர பலத்தமான பின் நவாட்சரி மூல மந்திரத்தால் வழிபடலாம்.

பாலா தியான மந்திரம்

அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா!!!

என்று அவளை தியானித்த உடனே குழந்தையாய்  ஓடி வருபவள்.

சித்த ரகசியம்: ஒரே இடத்தில் அமைந்த 64 சித்தர்களின் ஜீவ சமாதி! அதிசயங்கள் நிறைந்த சித்தர் காடு!

பாலாம்பிகை கோவில்கள்

பாலா திரிபுரசுந்தரியை அக கண்ணினாலே கண்டு தான் சித்தர்கள் பூஜித்தனர். எனவே பாலாம்பிகை கோயில்கள் குறைவாகும்.

நம் தமிழகத்தில் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோவில் பாலா பீடம் நெமிலி என்ற ஊரில் அமைந்துள்ளது. மேலும் சில இடங்களில். லலிதா திரிபுரசுந்தரி கோயிலில் பாலாவிற்கான சன்னதி அமையப்பெற்றுள்ளது.

கலியுகத்தின் ஒப்பற்ற சக்தி பாலாம்பிகை

நாம் வாழுகின்ற இக்கலியுகத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வருகிறோம். நற்கதிக்கான வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோம்.

இந்த நரக வாழ்வில் இருந்து விடுபட்டு நற்பேறு அடைய வழிக்காட்டுபவள் பாலாம்பிகையே ஆவாள். அவள் பாதம் பணிந்து சரணாகதி அடைந்து எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here