ஆடி மாத தரிசனம் 6: வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற பெயருடன் அமர்ந்த அற்புதமான கோவில். ஆலத்தூர் மயிலாயி அம்மன் கோவில் சிறப்புகள்.
நமது தமிழகத்தில் கிராமப்புறங்களில் சப்த மாதர்கள் வழிபாடு என்பது தொன்று தொட்டு விளங்கி வருகிறது.
பிராம்மி, இந்திராணி, வராகி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, சாமுண்டி என்பவர்களே சப்த மாதர்கள் ஆவர்.
இவர்களில் நடுநாயகமாக விளங்கும் விஷ்ணுவின் சக்தியே வைஷ்ணவி தேவி ஆவாள்.
இந்த வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற திருநாமத்துடன் உள்ள திருத்தலமே ஆலத்தூர் மயிலாயி அம்மன் திருக்கோவில் ஆகும்.
ஆலத்தூர் மயிலாயி அம்மன் வரலாறு
பல நூறு வருடங்களுக்கு முன்பு விவசாயம் செழித்து வளர்ந்த ஆலத்தூர் எனும் இக்கிராமத்தில் மக்கள் தங்களுக்கென்று கிராம தேவதைகளாக சப்த மாதர்களை ஒரு குடிசையில் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தனர்.
ஏழு பேரில் நடுநாயகமாக விளங்கும் வைஷ்ணவி தேவிக்கு மயிலாயி என்று செல்லமாக பெயர் சூட்டி வணங்கி வந்தனர். தங்கள் வீட்டின் பெண் பிள்ளைகளை போல் அம்மன்களை சிறப்பாக கவனித்து வந்தனர்.
மயிலாயி தேவியும் மக்கள் கேட்ட வரங்களை வழங்கும் மகாலட்சுமியாய் எல்லா வரங்களையும் வாரி வழங்கினாள்.
பின்பு குடிசையாக இருந்த கோவிலை தங்களின் செல்வம் பெருக பெருக கோபுரம் அமைத்து பெரிய கோவிலாக கட்டினர். அதன் பின்பு மயிலாயி கோவில் என்றே அனைத்து ஊரிலும் பிரபலமாக ஆனது. பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது.
திருக்கோவில் அமைப்பு
கருவறையில் சப்த மாதர்களும் வரிசையாக அமர்ந்த நிலையில் உள்ளனர். நடுவிலே வைஷ்ணவியாக மயிலாயி அம்மன் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.
வடக்கு நோக்கிய திருக்கோவில். திருச்சுற்றில் கணபதி, முப்புலி கருப்பண்ணன், சாம்பவன், மதுரை வீரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
கோவிலுக்கு 2 கி.மீ. தொலைவில் மயிலாயி தேவியின் தங்கை என்று கூறப்படும் பத்ரகாளி கோவில் உள்ளது.
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் மயிலாயி தேவிக்கு திருவிழா நடைபெறுகிறது. காவிரியில் இருந்து தீர்த்த குட ஊர்வலம், பால் குடம், தீமிதி விழா போன்றவை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
செல்வ வளம் தருவாள் மயிலாயி!
மகாலட்சுமியே வைஷ்ணவி தேவி ஆவாள். அந்த வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற திருநாமத்துடன் மக்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்கும் அம்பிகையாக உள்ளாள்.
பஞ்சம் பசி என்று எதுவும் இவளை வணங்குவதால் நெருங்குவதில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
அனைவரும் ஆலத்தூர் சென்று மகாலட்சுமி மயிலாயி அம்மனை வணங்கி சகல செல்வங்களும் பெறுவோம்.
அமைவிடம்: திருச்சியில் இருந்து கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலத்தூர் கிராமம். திருச்சியில் சத்திரத்தில் இருந்து பஸ் வசதி உண்டு.
நடைதிறப்பு: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
ஆடி மாத தரிசனம் தொடரும்..!