Movie Review 96. இப்படம் ஆட்டோகிராப் அல்ல. இது வேறு ரகம். ஆட்டோகிராப் மாதிரி இப்படம் உள்ளது என சொல்வதே தவறு. இப்படம் காதல் தோல்வியின் மலரும் நினைவுகள்.
96, விஜய்சேதுபதி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் 4-ம் தேதியே வெளியாக வேண்டியது. விஷால் செய்த பிரச்சனையால் தாமதமாக மறுநாள் வெளிவந்துள்ளது.
இப்படத்தை இளம் காதல்ஜோடி ரசிப்பது மிகக்குறைவே. 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இப்படத்தைப்பற்றி அதிகம் பேசுகின்றனர். தங்களுடைய பள்ளி பருவத்தின் மலரும் நினைவுகளாக இப்படம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதில் ஒரு காதலே. ஒரே ஒரு காதலியே. அட்லி மாதிரி உள்ள பையனுக்கு பின்ன, இட்லி மாதிரி ஒரு காதல் கதை இருக்கும். கருப்பா இருக்கவன் தான் அந்த நேரத்தில் பெண்களால் அதிகம் ரசிக்கப்பட்டவன்.
வெளியில கெத்து ஆனா, காதலி முன்ன பேச தயங்குவது. படபட இதயத் துடிப்பு. காதலி தைரியமாக பேசுவது. இப்படி ரசிக்க வைக்கும் காட்சிகள் நிறையவே உள்ளது.
படத்தின் முதல் அரைமணி நேரம், புகைப்படக் கலைஞர்கள் கண்களுக்கு விருந்து. அவ்வளவு அழகாக சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு பிரேமும் ரசிக்க வைக்கிறது.
ஆனால் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் தேவையற்ற நகர்வுகள், இழுவை, அமைதி என நல்ல காட்சிகளுக்கு இடையில் ஆங்காங்கே தொந்தரவு செய்கின்றன.
படத்தை ஒரு ஆர்ட் மூவியாகவும், காமர்சியலாகவும் கொடுக்க நினைத்ததே இந்த தொய்விற்கு காரணம். விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடிப் பொருத்தம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
க்ளைமேக்ஸ் காட்சியில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்வார்கள் அல்லது லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
விஜய்சேதுபதி இறுதியாக த்ரிஷாவின் துணியை மீண்டும் பொக்கிசமாக பைக்குள் திணிக்கும்போது, நீ இதுக்கு மட்டும் தான் லாயக்கு என ரசிகர்கள் குரல் கொடுப்பதிலேயே அவர்கள் ஏமாற்றம் புரிகின்றது.
கொஞ்சம் நீளமான க்ளைமேக்ஸ். இயக்குனர் மூக்கை நேராக தொடுவதற்கு பதில் தலையை சுற்றித் தொட்டுள்ளார். அதனாலேயே இந்த இழுவை.
தேவதர்சினியின் பள்ளிப்பருவ, முகத்தேர்வு அருமை. அவரை போன்ற அதே சாயல், அதே வால் தனம். அது அவருடைய மகள் தான். பள்ளிப்பருவத்தில் வரும் காதல் ஜோடியிடம் இருந்த கெமிஸ்ட்ரி, விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷாவிடம் இல்லை.
இருப்பினும் இப்படம் காதல் தோல்வியின் மலரும் நினைவுகளாக ரசிகர்கள் மத்தியில் இடம்பெரும்.