Home ஆன்மிகம் அம்மன் தரிசனம்: வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பாள் அம்பகரத்தூர் பத்ர காளி!!!

அம்மன் தரிசனம்: வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பாள் அம்பகரத்தூர் பத்ர காளி!!!

532
0

அம்மன் தரிசனம்: வேண்டிய வரங்களை அள்ளி தரும் அம்பகரத்தூர் காளி. எதிரிகள் தொல்லை நீக்கும் சக்தி திருத்தலம். வெள்ளை ஆடை மட்டுமே அணியும் பத்ர காளி.

அசுரர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்ட அன்னை ஆதி சக்தி ஒவ்வொரு முறையும் புவியில் தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவாள்.

அப்படிப்பட்ட அந்த அன்னை பத்ர காளியாக தோன்றி அசுர குலத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய சக்தி திருத்தலமே அம்பகரத்தூர் ஆகும்.

அம்பகரத்தூர் காளி வரலாறு

அம்பன், அம்பகரன் என்கின்ற இரு அரக்கர்கள் தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் துன்பறுத்தி வந்தனர். இதனால் தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.

திருமாலும் அவர்களை இரட்சிக்க முடிவெடுத்தார். தமது தங்கையான காளி தேவியை அழைத்தார். அண்ணனும், தங்கையும் சேர்ந்து அசுர சகோதரர்களை வதம் செய்ய புறப்பட்டனர்.

திருமால் அந்தணன் வடிவம் கொண்டார். காளியோ அழகிய கன்னி உருவம் கொண்டாள். அசுர மாளிகை நெருங்கியதும் அழகிய பெண்ணை கண்டவுடன் அவர்களை சேவகர்கள் அசுர சகோதரர்கள் முன் நிறுத்தினர்.

அம்பனும் அம்பகரனும் அந்த பெண்ணின் மீது மோகம் கொண்டனர். அவளை அடைய இச்சை கொண்டனர்.

அம்பன் அவள் அருகில் நெருங்கியதும் கோர வடிவமாக மாறினாள். அவளின் உக்ர வடிவம் அனைவரையும் அச்சுறுத்தியது. மேலும் அன்னை வெளியிட்ட ஹூங்கார குரலால் அம்பன் அவ்விடமே மாண்டு போனான்.

இதனால் கோபம் கொண்ட அம்பகரன் அம்பிகையை தாக்க பல மாயா ரூபத்துடன் போரிட்டான். இறுதியாக காட்டெருமை வடிவம் கொண்டு போரிட்டான்.

அம்பிகை அவனை சாய்த்து திருப்பாதத்தை அவன் மீது ஊன்றி அவன் மார்பில் சூலத்தை பதித்தாள். சூலினியின் திரிசூலம் அவனை வேரோடு சாய்த்தது.

அம்பகரனை அழித்த அந்த இடமே அம்பகரத்தூர் என்றானது. மகிட ரூபம் கொண்ட அசுரனை அழித்த பத்ர காளியாய் அன்னை காட்சி அளிக்கிறாள்.

கோவிலின் அமைப்பு

அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய தொன்மை வாய்ந்த ஆலயம். ஆலயத்தின் தெற்கு பகுதியில் அம்பகரனை காலால் மிதித்து அவனை மார்பை சூலத்தால் பிளக்கும் திருக்காட்சியினை காணலாம். வடக்கே அம்பனை தன் வாளால் துண்டிக்கும் திருவுருவை காணலாம்.

எட்டு திருக்கரங்களுடன் சிவந்த திருமேனியுடன் குங்கும மணம் வீச அம்பகரனை இடக்காலில் மிதித்து வல காலை மடித்து வைத்து வெண்ணிற ஆடை உடுத்தி காட்சி தருகிறாள் அன்னை பத்ர காளி.

அம்பிகையின் முன் பலி பீடமும், மகிஷ பீடமும் உள்ளது. மேலும் காளீஸ்வரர் சன்னதியும், பெத்தணர் மற்றும் பேச்சியம்மன் சன்னதியும் அமைந்துள்ளது.

ஆலய திருவிழாக்கள்

வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய் மகிஷ வதம் மிகச் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் மற்றும் தை மாத கடை செவ்வாய் ஏக தின லட்சார்சணை நடைபெறும்.

ஆடி மற்றும் தை கடைசி வெள்ளியில் ஆயிர கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்கின்றனர். நவராத்ரி நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அள்ளி கொடுப்பாள் அம்பகரத்தூர் காளி!

எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள் இங்கே வந்து வேண்டி கொண்டால் போதும் எதிரிகளை வேரறுப்பாள் பத்ர காளி.

மாங்கல்ய பலம் பெருகவும், நல்ல கணவன் அமையவும் பெண்கள் இங்கே நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் நல்ல வாழ்வு கிடைக்கும்.

ஏவல், பில்லி, சூன்யம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும். வேண்டிய வரங்களை அள்ளி தரும் சக்தியாக அமர்ந்துள்ளார் அம்பகரத்தூர் பத்ர காளியம்மன்.

அனைவரும் அம்பகரத்தூர் சென்று அன்னையை தரிசித்து ஆனந்த நல்வாழ்வினை பெறுவோம்.

அமைவிடம்: புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பகரத்தூர் பத்ர காளி ஆலயம்.

நடைதிறப்பு: காலை 6 மணி முதல் 12 வரை, மாலை 5 முதல் 9 மணி வரை.

Previous articleஇன்னும் 30 நாள்: டுவிட்டரில் சிங்கம் சூர்யா டிரெண்டிங்!
Next articleவிஜய் பர்த்டே ஸ்பெஷல்: குழந்தைக்கு வெற்றிமாறன் – னு பேர் வச்ச ரசிகர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here