Movie Review Kanaa – கனா திரைவிமர்சனம்
கிரிக்கெட் என்ன சோறு போடுமா? தண்ணியில்லன்னு கிரிக்கெட் டீம்ம ஓடவிட்ட ஊரு இந்த தமிழ்நாடு.
அப்படிப்பட்ட தமிழ்நாட்டு மக்களையே, கிரிக்கெட் பார்க்கவைத்து கண்ணீர் வடிக்க வைத்துவிட்டார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
அருண்ராஜா காமராஜ், பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பாடகராக உருவெடுத்தார். கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதியும் பாடியும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
ராஜாராணி, மான்கராத்தே படத்தில் காமெடி நடிகராக அவதாரமெடுத்தார். கனா படத்தின் மூலம் இயக்குனராக உருமாறியுள்ளார்.
சமீபமா, விளையாட்டு பற்றி எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப்படமும் அடங்கும்.
வாழ்க்கையில் தொடர் தோல்வியால் துவண்டுபோன ஒருவன், இப்படத்தைப் பார்த்தால் 10 யானை பலத்துடன் வெளிவருவான்.
அந்த அளவிற்கு, படம் நெடுகிலும் மோட்டிவேசன் காட்சிகளும் வசனங்களும் நிறைந்து உள்ளன.
ஒரு போட்டியில் சதமடித்துவிட்டு கண்ணைப்பறிகொடுத்த திலீப்குமார் மற்றும் இந்தியப் பெண்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்த கௌசல்யா பற்றிய படம் இது.
கௌசல்யா விவசாயக்குடும்ப பின்னணி கொண்டவர். தமிழக வீராங்கனை கௌசல்யா, இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார்.
நெல்சன் திலீப்குமாராக சிவகார்த்திகேயன், கௌசல்யாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கௌசல்யாவின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் இணைத்துப் பார்வையாளர்கள் முகத்தில், சோகத்தைப் பீய்ச்சி அடிக்கிறார் இயக்குனர்.
சிவகார்த்திகேயன் என்ட்ரியில், இறுதிச்சுற்று மாதவன் நினைவில் வந்துபோகிறார். கௌசல்யா கதாப்பாத்திரம், சக்தே இந்தியாவை நினைவூட்டுகிறது. சத்யராஜ், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் நினைவூட்டுகிறார்.
ஐஸ்வர்யாவிற்கு இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் பயிற்சி கொடுத்திருக்கலாம். கிராபிக்சை குறைத்து, ரியலைஸ்டிக் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
பெண்களுக்கு இப்படம் மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது. இனி, பெண்பிள்ளைகள் பற்றிய பெற்றோரின் மனநிலை மாறும்.
விவசாயம் என வியாபாரம் செய்யாமல், விவசாயிகளின் வலியை நடுமண்டையில் அணியடித்தார்போல் அழுத்தமாக கூறியுள்ளனர் .
படத்தின் மிக முக்கியத் தூண்கள் எடிட்டிங், இசை மற்றும் ஒளிப்பதிவு. இந்த மூவரும் சேர்ந்தால், சாதாரணக் காட்சிகளில் கூட ஹார்ட்பீட் எகிறுகிறது.
கைப்புள்ள அழக்கூடாது என மனதைத் தேற்றிக்கொண்டாலும், அதையும் மீறி மனது சோகமயமாகிறது.
எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவருக்கும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில் கனா, கற்பனைச் சரித்திரம்.