இரவு நேரப் பள்ளி, சோலார் பை, தனி மனிதப்புரட்சி!
ரோகய்ல் வரிந்த் என்ற சமூக ஆர்வலரின் ஒரே நோக்கம் கஷ்டத்தில் இருக்கும் ஒருவேளை உணவுகூட கிடைக்காத குழந்தைக்கு கல்வி வழங்குவதே!
ஏறத்தாழ 23 மில்லியன் ஏழைக் குழந்தைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, அடிப்படைக் கல்விகூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதில் பலர், குழந்தைத் தொழிலாளர்களாக கூலி வேலை செய்து தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
2016-ம் ஆண்டு பாகிஸ்தானில், முதல் சோலார் பேக் பள்ளியை ரோகய்ல் வரிந்த் நிறுவினார். இது இரவில் மட்டுமே இயங்கி வந்தது.
ஏனெனில், பெரும்பாலானோர் குழந்தைத் தொழிலாளர்கள். பகலில் அனைவரும் வேலைக்குச் சென்று விடுவார்கள்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் போதிய மின்சார வசதிகளும் இல்லை. இதனால், சோலார் பேக் பள்ளியை இரவு நேரங்களில் இயக்கி அனைவருக்கும் கல்வி கொடுத்தார்.
பாகிஸ்தானில் 40% ஏழைக் குழந்தைகள், போதிய படிப்பு இல்லாமல் வேலைக்குச் செல்கின்றனர். மொத்த மக்கள்தொகையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் மின்சாரமின்றியே வாழ்கின்றனர்.
ரோகய்ல், 2015-ம் ஆண்டு சோலார் பேக்கை கண்டுபிடித்தார். அதை, ஒரு நல்ல வழியில் உபயோகிக்க வேண்டும் என எண்ணினார்.
அதற்காக, சோலார் பேக் ஒளியில் ஒரு பள்ளியைத் துவங்கிவிட்டார். இந்த சோலார் பேக் மூலம் கல்வி மட்டுமில்லாமல், இரவு நேரங்களில் மின்சாரமும் கிடைக்கிறது.
ஒரு சோலார் பேக், 12 குழந்தைகள் படிப்பதற்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுக்கிறது.
பணமாக யாரும் உதவி செய்ய வந்தால், ரோகய்ல் மறுத்துவிடுவார். பொருள் அல்லது உணவாக குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும் என விரும்புவார்.
அது மட்டுமில்லாமல், நவீன முறையிலான அனைத்து சோலார் கருவிகளையும் பயன்படுத்தி ரோகய்ல், இப்பள்ளியை நடத்தி வருகின்றார்.
10 சோலார் ஜெனரேட்டர், 30 சோலார் பல்ப் மற்றும் மின்விசிறிகளைக் கொண்டு பள்ளியை நடத்தி வருகின்றார்.
இதனால், குழந்தைகளும் பெற்றோர்களும் மிகவும் சந்தோசமடைந்துள்ளனர். குழந்தைகளின் கனவு நிறைவேறும் என்பது ரோகயிலின் நம்பிக்கை.
இப்பள்ளியை மேலும் விரிவடையச்செய்து அனைத்து குழந்தைகளுக்கும் தன்னால், கல்வி கொடுக்கமுடியும் எனக் கூறியுள்ளார்.
ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை ரோகய்ல் வரிந்த், தனி மனிதப்புரட்சியாக மாற்றியுள்ளார் .