ஒரு விரல் புரட்சி (Oru Viral Puratchi) என்னும் விந்தை எப்படி இருக்கவேண்டும். மக்கள் தன்னுடைய தலைவனை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் ஓட்டு யாருக்கு?
அரசியலின் அரியனை
அரசியல் என்னும் அதிகாரத்தை ஆளும் தகுதி என்பது எளிதாய் போனதால் அந்த அரியனையில் ஏறத்துடிக்கும் மனிதர்கள் பலர்.
அந்த அரியனையில் ஏறும் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் பல. ஆனால், அந்த மனிதனை ஏற்றிவிட்ட மக்களின் நிலை???
உண்மையின் குரல்
தேர்தல் என்றவுடன் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பவன் அரியனை ஏறியவுடன் அதை மறக்கிறான்.
ஏனென்றால், அவன் ஆசைப்பட்ட அரியனையில் ஏறியதே தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள மட்டுமே. இப்படி இருக்க தேர்தலின்போது அவனின் குரலில் ஒலிக்கும் வார்த்தை மட்டும் மெய்படுமா என்ன???
பிரச்சனையின் மறுஜென்மம்
முன் இருந்த ஆட்சியில் ஏற்பட்ட பிரச்சனைகள் இவன் வந்தவுடன் இருமடங்காக உயர்கிறது. எதனால் என்றால் இவன் அரியனை ஏறியதற்கு முக்கிய காரணம் பணம்.
ஒரு ஓட்டுக்கு பணம் என்றவுடன் அதை நாம் விற்றதால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான் இவை.
பணம் கொடுத்து அரியனையை வாங்கியவன். அந்த அரியனையால் எப்படி பணம் எடுப்பது என்பதே அவன் சிந்தனையாக இருக்குமே தவிர அவன் மக்களுக்கு எப்படி நன்மை புரிவான்?
எழுச்சியின் அலறல்
நடப்பதை மாற்றி அமைக்க மாற்றங்கள் வேண்டும் என்று குரல் கொடுப்பவன் தனக்கொரு ஆதாயத்திற்காக, தன்னுடைய எழுச்சிக்காக பொய் பிரச்சாரம் செய்கிறான்.
அவனின் பொய்யான வார்தைகளை நம்பி ஏமாறும் மக்கள், வறுமையால் வாடும்போது கேட்கும் அலறல் சத்தம் இங்கு ஏராளம்.
விடைகளின் விதை
இப்படி, மக்களாட்சி நடக்கும் நாட்டிலே, மக்களின் தோல் மீது ஏறி ஆட்சி செய்பவர்களே அதிகம். இந்த நிலைமையின் கேள்விக்கான விடை தான் என்ன??
பணம் கொண்ட மனிதன் அதை வெறுக்கும் இயல்பு கொண்ட ஒருவன்தான். இந்த கேள்விக்கான விடைகளின் விதை.
அனுபவித்த ஒன்றை வேண்டாம் என்பவனுக்கு, அதை அனுபவிக்க எண்ணம் தோன்றாது.
விதையின் விருட்சம்
நாம் வேண்டாம் என்பதை தூக்கி வீசினால் அது வேண்டும் என்பவன் தானாக தூக்கியெறியப்படுவான்.
பணம் மீதும், பதவி மீதும் ஆசை இல்லாதவன் அரியனையில் ஏறினால், மக்கள் எதிர்ப்பார்த்த ஒன்று அவன் ஏதுவும் செய்யாமலே வந்து சேரும்.
தவறு என்ற ஒன்றை நினைக்காமல் இருந்தால் நன்மை தானாக ஏற்படும் என்பதைப்போல் இந்த விதையும் மக்களின் கனவை நிஜமாய் மாற்றும் விருட்சமாய் மாறும்.
ஒரு விரல் புரட்சி என்னும் விந்தை
ஒரு விரலால் அரசியல் என்னும் அரியனையில் ஏற்றிவிடும் விந்தை கொண்ட மக்கள் அடிமையாய் போவதற்காக, பணத்தை வாங்கிக்கொண்டு அந்த விந்தையை நிகழ்த்த வேண்டாம்.
உண்மைக்காக தங்களின் உரிமையை புரிந்து கொள்ளும் ஒருவனுக்காக இந்த விந்தையை நிகழ்த்தினால் இனிவரும் காலங்கள் பொற்கால அரசியலாய், பொற்கால ஆட்சியாய் மாறும்.
உங்கள் ஓட்டு யாருக்கு? என்று இப்போது கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.