Home ஆன்மிகம் புனிதமான ரமலான்: இன்று ரமலான் நோன்பு ஆரம்பம்

புனிதமான ரமலான்: இன்று ரமலான் நோன்பு ஆரம்பம்

367
2

ரமலான் நோன்பு 2020: உலகம் முழுவதும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் ஊரடங்கில் உள்ள நிலையில் இந்தியாவில் இன்று முதல் ரமலான் தொடங்குகிறது.

ரமலான் என்றால் என்ன?

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ரமலான். மக்காவிலுள்ள ஹிரா குகையில் கி.பி. 610 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் தான் முஹம்மது நபி அவர்களுக்கு திருக்குர்ஆனின் முதல் இறை வசனம் இறக்கியருளப்பட்டது.

ரமலான் மாதத்தில் ஏன் முஸ்லிம்கள் நோன்பு இருக்கிறார்கள்?

“ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேரான வழியை தெளிவாக்க கூடியதுமாகவும் உள்ள திருகுர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்”
-அல்குர்ஆன் 2:185

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்று நோன்பாகும். இறைவனால் விலக்கப்பட்ட தீமைகளை விட்டு விலகி அவனுடைய கட்டளைக்கு அடிபணிந்து இஸ்லாமிய நெறியின் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள இம்மாதம் ஒரு பயிற்சியை போன்றதாகும்.

12 வருடங்களாக குறைஷிகளின் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான முஸ்லிம்கள் கி.பி. 622 ஆம் ஆண்டு மக்காவில் இருந்து இடம்பெயர்ந்து மதீனாவிற்கு குடியேறினர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு நோன்பு குறித்த திருக்குர்ஆன் வசனம் இறக்கியருளப்பட்டது.

உடல் எடையை குறைப்பதற்கான மாதமல்ல ரமலான்! கண்ணியமிக்க இம்மாதத்தில் உணவை குறைப்பதோடு நிறுத்திவிடாமல் பாவங்களை குறைத்து நன்னடத்தை பேணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“நோன்பின்போது யார் பொய் பேசுவதையும் தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது அல்லாஹ்விற்கு தேவை இல்லை” என்பது நபிமொழி.

ஒவ்வொரு இஸ்லாமியரும் நோன்பு காலத்தில் காலை முதல் மாலை வரை உணவு, நீர், புகைப்பிடித்தல், பழரசம் அருந்துதல் என அனைத்தும் தவிர்க்க வேண்டும்.

நோன்பு துவங்கும் முன் உண்ணும் உணவு “ஸஹர்” எனப்படுகிறது. நோன்பு முடிந்த பின் உண்ணும் உணவு “இப்தார்” எனப்படுகிறது.

நோன்பு இருப்பதால் ஏற்படும் நற்பண்புகள்

நோன்பு காலத்திற்கு பின் தன்னடக்கம், நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம், பகிர்ந்து உண்ணுதல், உணவு தானம் போன்ற நற்பண்புகள் மனதில் தோன்றும்.

ரமலான் நோன்பின் பலன்கள் குறித்து திருக்குர்ஆன் இரண்டாம் அத்தியாயம் 183 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

“இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்”

2020-இல் ரமலான் நோன்பு

இந்த ஆண்டு ரமலான் நோன்பு இன்று ஏப்ரல் மாதம் 25-ஆம் நாள் சனிக்கிழமை துவங்குகிறது. நோன்பு நோற்பவர்கள் அனைவரும் முறையாக நோன்பிருப்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் தலையாய கடமையாகும்.

அல்லாவின் கருணையினால் உலகில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ தவறாமல் தொழுகை செய்வோம்.

 

Previous article25/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleவிம்பில்டன் போட்டிகள் ரத்து – ஏஇஎல்டிசி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here