சனீஸ்வரன் (Saturn): நீதிமான் சனி பகவான், சனி பகவான் அருள்புரியும் திருத்தலம், 21 அடி உயர சனி பகவான் அமைந்துள்ள ஒரே தனிக் கோவில்.
நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களும், இன்ப துன்பங்களும் நமது ஜாதகத்தின் கிரக நிலையை பொருத்தே அமையும். இதில் சுபகிரகங்கள், அசுபகிரகங்கள் என்று பிரிவுகள் உள்ளது.
கிரகங்கள் அனைத்தும் நமது கர்ம பலன்களுக்கு ஏற்றவாறு பலன்களை தருகின்றன. இதில் தேவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பயப்படும் ஒரே கிரகம் “சனி பகவான்” ஆவார்.
நீதிமான் சனீஸ்வரன்
கிரகங்களில் சிவனுக்கு இணையாக ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனீஸ்வரன் மட்டுமே ஆவார். இவர் சூரியனுக்கும் சாயா தேவி என்கிற நிழலுக்கும் மகனாக பிறந்தவர்.
அனைவரும் சனி பகவானை கண்டால் அஞ்சுவர். காரணம் அவர் மிகவும் கஷ்டங்களை வழங்குபவர் என எண்ணுகின்றனர்.
ஆனால் உண்மையில் அவரை போன்று நீதி தவறாமல் தக்க பலன்களை வழங்குபவர் எவரும் இல்லை. இவர், ஒருவர் செய்யும் கர்ம வினைகளை தான் பலனாக அவருக்கே திருப்பி வழங்குவார்.
நாம் நற்காரியங்களை செய்தால் நன்மை தருவார். அதிகமாக தீய காரியங்களை செய்தால் நாம் செய்த தீவினைகளை நமக்கே திருப்பி வழங்குபவர் இவரே.
ஆயுள் காரகன் என்று இவரை ஜோதிடம் கூறுகிறது. ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்வதும் இவரே ஆவார்.
21 அடி உயர சனி பகவான் கோவில்
இப்படிப்பட்ட சனி பகவானிற்கு எண்ணற்ற கோவில்களில் தனி சன்னதிகள் இருப்பினும் தனி கோவில்கள் அதிகமாக இல்லை.
தமிழகத்தில் சனிக்கான தலம் என்றாலே நினைவிற்கு வருவது திருநள்ளாறு மற்றும் குச்சனூர் ஆகும். சனி பகவானிற்கு என்று தனியாக கோவில் அமைந்துள்ள இடமே விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு ஆகும்.
இங்கே மூலவராக சனி பகவான் இருப்பதே தனிச்சிறப்பு ஆகும். மேலும் யோகநிலையில் இருப்பது இன்னும் சிறப்பான விஷேசமாகும்.
வேறெங்கும் இல்லாத வண்ணம் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் சனி பகவான்.
நான்கு திருக்கரத்துடன் வலது காலை காகத்தின் மீது ஊன்றி நின்ற வண்ணம் காட்சி தருகிறார்.
இவருக்கு மந்தன் என்ற பெயரும் உள்ளது காரணம் சனி பகவானின் வலது காலில் உள்ள ஊனத்தால் அவரால் வேகமாக நடக்க இயலாது எனவே தான் மந்தன் என்ற திருநாமம் கொண்டார்.
இதை உணர்த்தும் வகையில் வலது கால் சற்று சிறியதாகவும் இடக்கால் நீண்டு இருக்கும் வண்ணம் மூலவர் விக்ரஹம் அமைந்துள்ளது.
கரங்களில் சூலம், கத்தி, வில் மற்றும் அம்பு தாங்கி காகத்தின் மீது கருணை பொங்கும் விழிகளோடு அருட்காட்சி புரிகிறார் ஸ்ரீ சனீஸ்வரன்.
கோவிலில் உச்சிஷ்ட கணபதி, 18 அடி உயர அஷ்டாதச புஜ துர்கை, 11 அடி உயர ஈஸ்வரர், 18 அடி உயர முருகன், புவனேஸ்வரி, கோபால கிருஷ்ணன் ஆகியோரின் சன்னதிகளும் உண்டு.
இக்கோவில் பிரம்மானந்த சுவாமிகளால் கட்டப்பட்டது. மிகவும் சிறப்பு வாய்ந்த பிராத்தனை தலமாக விளங்குகின்றது.
பரிகாரம் தேவையில்லை பிராத்தனையே போதும்!
இக்கோவிலில் மற்ற சனி பகவான் கோவிலை போல் எந்தவொரு பரிகாரமும் தேவையில்லை. சனி பகவானின் சன்னதியில் அமர்ந்து தியானமும், பிராத்தனையும் செய்தாலே போதும்.
நாம் செய்யும் நற்காரியங்களுக்கும், கர்ம வினைகளுக்கும் ஏற்ப சிறந்த பலன்களை சனி பகவான் வழங்கி வருகிறார்.
ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவில் வந்து பிராத்தனை செய்தால் போதும்.
கவலைகள் தீர்க்கும் மிகச்சிறந்த சனி பகவானின் பிராத்தனை தலமாக விளங்குகிறது இந்த கல்பட்டு சனீஸ்வரன் கோவில்.
நாமும் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு சென்று சங்கடங்களை தீர்க்கும் சனி பகவானை பிராத்தனை செய்து நற்பலன்கள் பெறுவோம்.
அமைவிடம்: விழுப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் கல்பட்டு என்ற ஊரில் அமைந்துள்ளது.