ரமலான் நோன்பு ஸகாத் (ஏழை வரி): ஸகாத் என்றால் என்ன? ஸகாத் ஏன் கட்டாயமாக செய்ய வேண்டும்? யாரெல்லாம் ஸகாத் பெற தகுதியானவர்கள்? எந்த பொருட்களை தானமாக கொடுக்கலாம்?
செல்வம் அல்லாஹ்வினால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பேரருள் ஆகும். செல்வம் வழங்கப்பட்டவர்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து குறிப்பிட்ட அளவை ஏழை எளியோருக்கு வழங்குவதே ஸகாத் ஆகும்.
இது இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைத் தூண்களில் ஒன்றாகும். ஸகாத் என்ற வார்த்தைக்கு “வளர்ச்சி அடைதல்” என்று பொருள்.
இறைவன் தன் திருமறையில் “நீங்கள் தொழுகையை கடைப்பிடித்தும் ஷகாத் என்னும் கட்டாய தர்மத்தை கொடுத்தும் வாருங்கள். (மரணத்திற்கு)
முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை செய்து அனுப்பினிர்களோ அதனையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றுநோக்கியவனாக இருக்கிறான்.” (அல்பகரா ; 110)
என்று கூறுகிறான்.
எந்தெந்த பொருள்களின் மீது ஸகாத் கடமையாகிறது?
1)தங்கம்
2)வெள்ளி
3)வியாபார பொருள்கள்
4) கால்நடை விலங்குகள்
மேற்கண்ட பொருட்கள் நம்மிடம் ஒரு வருடம் முழுவதும் இருந்துவிட்டால் அவைகளின் மீது ஷகாத் கடமையாகிறது.
ஷகாத் பெற தகுதியானவர்கள்:
1. வருமானமில்லாத பரம ஏழைகள் (பக்கீர்)
2. ஒன்றும் இல்லாதவர்கள் (மிஸ்கீன்)
3. ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள்.
4. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்.
5. அடிமைகள்
6. கடனில் மூழ்கித் தவிப்பவர்கள்.
7. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்.
8. வழிப்போக்கர்கள்
ஏழை உறவினர்களுக்கு பொருளுதவி செய்வது பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்), “அன்னிய ஏழைகளுக்கு தர்மம் செய்வது ஒரு தர்மமாகும். தன் ஏழை உறவினருக்கு தர்மம் செய்வது இரண்டு தர்மமாகும்” என்று கூறுகிறார்கள்.
“ஸகாத் கொடுப்பதில் காலதாமதம் செய்யக்கூடாது!” நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன்.
அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள்.
அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள்.
‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை.
அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள் என்பதாக உக்பா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். – புகாரி:851