சனி தோஷம் நீக்கும் சனி மகா பிரதோஷம். பிரதோஷ காலம் என்றால் என்ன? சனி பிரதோஷத்தின் சிறப்புகள் என்ன? எவ்வாறு விரதம் இருந்து சிவனை பூஜிக்க வேண்டும்?
கையிலையில் வீற்றிருக்கும் பரமனுக்கு பல்வேறு விஷேச தினங்கள் உண்டு.
அதில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை தினங்களில் வரும் பிரதோஷ தினங்களும் ஒன்று.
பிரதாஷமானது நித்திய பிரதோஷம், பிரளய பிரதோஷம், பட்ச பிரதோஷம் என்று 20 வகையான பிரதோஷங்கள் உள்ளது.
பிரதோஷ வேளை என்பது மாலை 04:30 முதல் 06:00 மணி வரை ஆகும்.
இது தினந்தோறும் வரும் நேரமாகும், இருப்பினும். திரியோதசி திதி தினங்களே “ பிரதோஷ தினம்” எனப்படுகிறது.
மேலும் சனிக்கிழமையுடன் திரியோதசி திதி சேர்ந்து வருவதே சனி மகா பிரதோஷம் ஆகும்.
பிரதோஷ கால சிவ நடனம்
இந்த பிரதோஷ காலத்தில் பார்வதி பரமேஸ்வரன் இருவரும் இணைந்து நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிகின்றனர் என்பது ஐதீகம்.
இதனை முப்பது முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும் காண வருவர். இந்த வேளையில் நந்தியெம்பெருமானை அபிஷேகித்து ஆராதனை செய்யும் போது சிறந்த பலன்களை தரும்.
பிரதோஷ விரத முறை
பிரதோஷ தினத்தில் காலை முதல் உண்ணா நோன்பிருந்து மாலையில் சிவ தரிசனம் செய்து. அதற்கு பின்பே உணவு உண்டு விரதம் முடிக்க வேண்டும்.
மாலை பிரதோஷ வேளையில் நந்திக்கு அபிஷேகம் செய்து நந்தியாவிட்டம், சங்குப்பூ, தாமரை, மலர்மாலைகள், அருகம்புல், வில்வம் சாற்றி அவருக்கு பிடித்தமான பச்சரிசி, வெள்ளம் கலந்த நைவேத்திங்கள் படைத்து வழிபட வேண்டும்.
மேலும் இன்றைய தினம் பார்வதி பரமேஸ்வரன் தம்பதி சகிதராக இடப வாகனத்தில் ஆலய திருச்சுற்றில் மூன்று முறை வலம் வருவார்.
கையிலை வாத்தியம், வேத பாராயணம், தேவார திருவாசகம் ஓதுவார்கள் ஓத அற்புதமாக திருக்கோயில் வலம் நடைபெறும். இதனை காண கண்கோடி வேண்டும்.
நாம் நந்தியிடம் இந்நாளில் வேண்டுகின்ற வேண்டுதல்கள் அனைத்தும் சிவனிடம் கொண்டு சேர்த்து உடனே பலன் தருவார் என்பது நம்பிக்கை.
சனி தோஷங்களை நீக்கும் சனி பிரதோஷம்
சனி கிழமையில் வரும் சனி மகா பிரதோஷமானது மற்ற பிரதோஷங்களை காட்டிலும் சிறப்பானதாகும்.
கிரகங்களில் சனியைக் கண்டால் அனைவரும் அஞ்சுவர். ஆனால் அவரைப் போல் ஒரு நீதிமான் எவரும் இலர்.
அவரவர் செய்த வினைகளுக்கு தகுந்த பலன் அளிப்பவர். இவர் “சிவ பக்தர்”. ஈஸ்வர பட்டம் பெற்று சனீஸ்வரன் என்ற நாமம் கொண்டவர்.
இவருடைய நாளில் வரும் பிரதோஷ தினங்களில் சிவ பூஜை செய்பவர்களுக்கு நல்ல பலன்களை அளிப்பார்.
ஏழைரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி என்று வக்ர சனியின் பார்வையாள் துன்புறுவோரின் துன்பங்கள் சனி பிரதோஷ தினத்தில் சிவனையும் நந்தியையும் பூஜித்தால் குறையும்.
இன்று (07/03/2020) சனி பிரதோஷ தினமாகும்.
இந்நாளில் மாலை சிவாலயம் சென்று வழிபட்டால் அனைத்து சனி தோஷங்களும் நீங்கி இந்திரன் போன்று சுகமான வாழ்வு பெற்று மோட்சத்தை அடைவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
தவறாமல் இன்று சிவாலயம் சென்று ரிஷபாரூடராக பார்வதி பரமேஸ்வரனை தரிசித்து நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று நற்கதி அடைவோம்.