ஆடி மாத தரிசனம் 3: சிவனை தலையில் சூடிய அம்பிகையின் திருக்கோவில். கோடி வளம் தரும் தஞ்சாவூர் கோடியம்மன் தரிசனம்.
அண்ட சராசரங்களை ஆளுகின்ற அன்னை பராசக்தியின் பல்வேறு ரூபங்களை நாம் தரிசித்தும், சிந்தித்தும் வருகிறோம்.
பகைவர்களை அழிக்கும் காளியாக, மழை பொழியும் மாரியாக, செல்வம் தரும் இலக்குமியாக அவளின் வடிவங்கள் பல கோடிகள் ஆகும்.
அந்த வகையிலே சிவனை தனது சிரசில் அமர்த்தி கொண்டு மகா காளியாக அம்பிகை காட்சி தரும் திருத்தலமே தஞ்சாவூர் கோடியம்மன் ஆலயம் ஆகும்.
திருக்கோவில் வரலாறு
தஞ்சகன் என்ற அசுரனை அழிக்க அன்னை பார்வதி தேவியே மகா காளி ரூபம் கொண்டு தனது பிள்ளைகளுக்கு இடையூரு செய்த அரசுனை சாய்த்தாள்.
பிறை சூடும் பெருமானை தன் சிரசின் மேல் அமர்த்தி கொண்டு அரசுனுடன் சிவசக்தியாக போர் புரிந்து வெற்றி கொண்டாள் என்கிறது தல வரலாறு.
தஞ்சயை ஆண்ட விஜயாலய சோழன் தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினான். பின் தஞ்சைக்கு காவலாய் அட்ட காளி கோவில்களை எட்டு திசைகளிலும் பிரதிட்டை செய்தான்.
விஜயாலய சோழன் எழுப்பிய திருக்கோவிலே கோடியம்மன் ஆலயம் ஆகும். தானே கோடி ரூபங்கள் எடுத்து அசுர படையுடன் போரிட்டதால் கோடியம்மன் என பெயர்க் கொண்டாள்.
அம்பிகையின் சிறப்புகள்
சிவனை சிரசில் சூடிய அம்பிகை அதனால் அவளுக்கு சிம்ம வாகனம் கிடையாது நந்தி வாகனம் மட்டுமே ஆகும்.
எட்டு திருக்கரத்துடன் காலில் அசுரனை மிதித்து அமர்ந்த திருக்கோலம். சிவந்த திருமேனியுடன் கருணை பொங்கும் விழிகளுடன் காட்சி தருகிறாள்.
வெளியே துவார பாலகிகளாக பச்சை காளி மற்றும் பவள காளிகள் உள்ளனர். பச்சை காளி, பவள காளி திருவிழா இங்கே மிகவும் பிரசித்தம்.
சிவசக்தி ரூபமானதால் அருகே இருக்கும் தஞ்சபுரீஸ்வரர், ஆனந்த வல்லி திருக்கோவிலிலும் இங்கேயும் ஒரே நேரத்தில் பூசை நடைபெறும் என்பது சிறப்பு.
கோவிலில் விநாயகர், பூர்ணா புஷ்கலாவுடன் சாஸ்தா, பச்சை காளி, பவள காளி, சிவன், சிவ துர்கை, விஷ்ணு துர்கை, பைரவர் சன்னதிகள் உண்டு.
அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பழமை மாறாத சோழர் காலத்து திருக்கோவில் ஆகும்.
வளங்கள் கோடி தருவாள் கோடியம்மன்!
இங்கே அன்னை தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி சகல வளங்களும் தருகிறாள்.
ஏவல், பில்லி, சூனியம், கிரக தோஷம், திருமண தடை என அனைத்தையும் போக்கி நல் வாழ்வு வழங்கி சந்தான வளத்தோடு சகல வளங்களும் கிடைக்கச் செய்கிறாள்.
அனைவரும் தஞ்சை சென்றால் தவறாமல் கோடியம்மனை தரிசித்து அவள் அருளாலே சகல வளங்களும் பெறுவோம்.
அமைவிடம்: தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் கும்கோணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் 8 மணி வரை.
ஆடி மாத தரிசனம் தொடரும்..!
Arumaiyana thagaval
😍😍😍