பெங்களூர் அணி தொடர்ந்து 6வது தோல்வி: கன்னித்தீவு கதையைப் போல இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
ஐ.பி.எல் தொடரின் 20-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயார் முதலில், பீல்டிங் தேர்வு செய்தார்.
பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேல் – கேப்டன் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.
பார்த்தீவ் (9), டி வில்லியர்ஸ் (17), மார்கஸ் ஸ்டோயினிஸ் (15) ஆகியோர் விரைவில் ஆட்டமிழக்க, மற்றொரு பக்கத்தில் கேப்டன் விராட் கோலி பொறுமையாக ஆடினார்.
அடுத்து வந்த மொயின் அலி அதிரடியாக 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் கோலி 33 பந்துகளில் 41 ரன்களில் எடுத்து அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். பிரித்வி ஷா (28), கொலின் இங்ரம் (21) ஆகியோர் ஓரளவுக்கு சேர்த்து வெளியேறினர்.
பொறுமையாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 10 ஓவருக்கு மேல் அதிரடி காட்ட 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், வேகமாக விக்கெட்டுகள் சரிந்தாலும் டெல்லி அணி எளிதாக 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணிக்கு இது தொடர்ந்து 6வது தோல்வியாகும். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீஸனில் முதல் 6 போட்டிகளில் தோற்ற அணி என்ற சாதனையைப் படைத்தது.