தமிம் இக்பால் அதிரடி; ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஜிம்பாப்வே டெஸ்ட் தோல்வி
டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் ஒருநாள் போட்டியில் லிட்டன் தாஸ் சதத்துடன் 320 ரன்கள் குவித்து 169 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது.
இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக சில்கட் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேசம் ரன்குவிப்பு
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கியது. முதல் ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் 322 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் அதிரடியாக ஆடி 158 ரன்கள் குவித்தார். ரஹீம் 55 ரன்கள், முகமதுல்லா 41 ரன்கள், மிதுன் 32 ரன்கள் எடுத்தனர்.
ஜிம்பாப்வே அணியில் மும்பா மற்றும் திரிபானோ தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
திரபானோ அதிரடி
323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி, முடிந்த வரை போராடி 4 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தனர்.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக கம்முன்ஹுவே 51 ரன்கள், மதேவேறே 52 ரன்கள், ராசா 66 ரன்கள், மோட்டோ பூச்சி 34 ரன்கள் எடுத்தனர்.
இறுதியாக வெற்றிக்கு போராடி வெற்றி இலக்கின் அருகில் வந்து, கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது திரிபானோ ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
ஒன்பதாவதாக களமிறங்கிய திரிபானோ 28 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார், இதில் 5 சிக்சர்கள் அடங்கும்.
ஜிம்பாப்வே அணி 225 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த போது திரிபானோ களமிறங்கினார். நம்பிக்கையை விடாமல் கடைசி போராடினார்.
நாம் ஜிம்பாப்வே அணியை பாராட்டியே ஆகவேண்டும், வங்கதேச அணிக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று வெற்றியின் மிக அருகில் வந்து தோல்வியடைந்தனர்.
வங்கதேசம் தரப்பில் தாஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டநாயகன் விருது
ஆட்டநாயகன் விருதை அதிரடியாக ஆடி 158 ரன்கள் குவித்த லிட்டன் தாஸ் வென்றார்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளை வென்ற வங்கதேச அணி தொடரை வென்றது.
கடைசி ஒருநாள் போட்டி வருகிற மார்ச் 6ஆம் தேதி இதே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.