IndvsNZ 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா முரட்டு தோல்வி. இந்தியாவை வீழ்த்தி நூறாவது வெற்றியை ருசித்தது நியூசிலாந்து அணி.
IndvsNZ 1st Test
பிப்.24 : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒய்ட்வாஷ் செய்தது.
இதற்கு பழித்தீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரில் இந்தியாவை 0-3 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்தது நியூசிலாந்து.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21-தேதி துவங்கியது.
முதல் இன்னிங்க்ஸ்
டெஸ்டில் தொடர் வெற்றிகளைச் சந்தித்து வந்த இந்திய அணி நியூசிலாந்துக்கு சவால் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா, நியூசிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக ரகானே 46 ரன்களும், மயாங் அகர்வால் 34 ரன்களும் எடுத்தனர், நியூசிலாந்து தரப்பில் சவுதீ மற்றும் ஜேமிஸ்சன் தல 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய நியூசிலாநது 341 ரன்கள் குவித்து இந்தியாவை விட 183 ரன்கள் முன்னிலை பெற்றது.
நியூசிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 89 ரன்களும், டெய்லர் மற்றும் ஜேமிஸ்சன் தல 44 ரன்களும், கிராண்ட்கோம் 43 ரன்களும் சேர்த்தனர். இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஷ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்க்ஸ்
183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி போராட்ட குணம் இல்லாத பேட்டிங்கை ஆடியது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி (2 & 19) இரண்டு இன்னிங்சிலும் ஏமாற்றினார். இந்தியாவின் ஆட்டத்தில் இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
தொடக்க ஆட்டக்காரர் பிர்த்வி ஷா, புஜாரா,ஹனுமன் விஹாரி இருவரின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமே இல்லாதது ஆட்டத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்தியா இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியாவில் அதிகபட்சமாக மயாங் 58, ரகானே 29, பந்த் 25 ரன்களும் சேர்த்தனர். நியுசிலாந்து தரப்பில் சவுதீ 5 விக்கெட்டும், போல்ட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஒன்பது ரன்கள் என்ற ஒற்றை இலக்கு எண்ணை எடுத்தால் வெற்றி என்று இறங்கிய நியூசிலாநது அணி, 1.4 ஓவர்களில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.
இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட இந்திய அணி கடக்கவில்லை, பும்ரா மற்றும் சமி பந்து வீச்சும் சொல்லும்படி இல்லை.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய டிம் சவுதீக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
100-வது டெஸ்ட் வெற்றி
441 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்துக்கு இது 100-வது டெஸ்ட் வெற்றியாகும். விராட் கோலி தலைமையில் முதலில் பேட் செய்து இந்திய அணி தோற்பது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட வருகிற பிப்ரவரி 29 தேதி கிரிஸ்ட்சர்ச்சில் நடைபெற இருக்கிறது.