ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகளாய் குவித்து வந்தது. உலக சாதனை படைக்கும் நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்தனர் லக்ஷ்மன் – டிராவிட் கூட்டணி.
தொடர் வெற்றி
1999-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியை பொழுதுபோக்காக வென்று, பாகிஸ்தானை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச்சென்று 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா.
பாகிஸ்தானின் பக்கத்து நாடு இந்தியாவை கூப்பிட்டு 3-0 வெற்றி பெற்று இந்தியாவை வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா.
பக்கத்து நாடு நியூசிலாந்துக்கு சென்று அதன் சொந்த மண்ணில் வெள்ளை அடிச்சு 3-0 என வெற்றிபெற்று நாடு திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆஸ்திரேலியாக்கு வரவைத்து 5-0 என்று டாட்டா காட்டியது ஆஸ்திரேலியா.
தொடர்ந்து 15 வெற்றி அசுர பலம் அசைக்க முடியாத அணி என பெயர் பெற்றது ஆஸ்திரேலியா அணி.
அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு சொல்ற மாறி ‘சின்ன டூர் போய்ட்டு வந்து லைஃப் ஸ்டாட் பன்னலாம்னு இருக்கேன்’,
இந்தியா வந்த ஆஸ்திரேலியா
இதுபோல 2001-ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கேயும் வெற்றிபெற்று திரும்ப ஆஸ்திரேலியாவில் மற்ற அணிகளை வேட்டையாடலாம் என நினைத்தது.
முதல் போட்டி மும்பையில் நடக்க இந்தியா தோல்வி ஆஸ்திரேலியா பெறும் 16 வது தொடர் வெற்றி. இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனைகள். 17 வது வெற்றி பெற ஈடன் கார்டன் மைதானத்திற்கு புறப்பட்டது ஆஸ்திரேலியா.
2 வது போட்டி
மார்ச் 11-ஆம் தேதி தொடங்குகிறது. டாஸ் வென்ற ஸ்டீவ் வாஹ் பேட்டிங்கை தேர்வு செய்கிறார். பேட்ஸ்மேன்கள் இந்தியா பந்துவீச்சாளர்களை வச்சு செய்கிறார்கள்.
கேப்டன் ஸ்டீவ் வாஹ் சதம் அடித்து 110 ரன்கள், ஹைடன் 97 ரன்னிலும், லாங்கர் 58 ரன்னும், ஸ்லாட்ர் 42 ரன்னும், இறுதியாக வந்த பவுலர் கில்லப்பஸி 147 பந்து பேட்டிங் செய்து 46 ரன்னும் எடுத்து சோதித்தார்.
ஹர்பஜன் 7 விக்கெட்
ஒருவழியாக 132 ஓவர்களில் அனைத்து விக்கெட்டும் இழந்து 445 ரன்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஹர்பஜன் ஏழு விக்கெட்டும், ஜாகீர்கான் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு சோதனையே காத்திருந்தது விவிஎஸ் லக்ஷ்மன் அரைசதம் அடிக்க 59 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி எப்படியும் இந்த போட்டியில் தோல்வியடைந்து விடும் என ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர் ஆஸ்திரேலிய அணி 17-வது தொடர் வெற்றிக்குத் தயாரானது.
லக்ஷ்மன் – டிராவிட் கூட்டணி
174 பின் தங்கியிருந்ததால் இந்திய அணிக்கு பாலோ ஆன் கொடுத்தார் ஸ்டீவ் வாஹ். இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த முறை நம்பிக்கை இழக்கவில்லை.
தாஸ் 30, ரமேஷ் 39, டெண்டுல்கர் 10, கங்குலி 48 ரன்கள் எடுத்து மூன்றாவது நாள் முடிவில் 252 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது.
விவிஎஸ் லக்ஷ்மன் இரண்டாவது இன்னிங்சில் 109 ரன்கள் எடுத்தும் ராகுல் டிராவிட் 7 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் களத்தில் நின்றனர்
நான்காவது நாள் அதாவது மார்ச் 14-ஆம் தேதி ஆட்டம் தொடங்கியது. எப்படியும் இன்றைய நாளில் மதிய உணவிற்கு முன்பே இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் எடுத்துவிடலாம் என்று ஆஸ்திரேலியா எண்ணியது.
பாவம் ஆஸி. பவுலர்கள்
ராகுல் டிராவிட்டும் லக்ஷ்மணனும் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை நோகடித்து, சோதனை செய்து விளையாடினார்கள். கொல்கத்தா மைதானம் முழு ரசிகர்களால் நிறைந்திருந்தது
நான்காவது நாள் முழுவதும் இருவரும் சேர்ந்து விக்கெட்டை இழக்காமல் 337 ரன்கள் சேர்த்தார்கள். இதனால் இந்திய அணி 189 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை விட 315 ரன்கள் முன்னிலை பெற்றது.
9 பந்துவீச்சாளர்கள்
ஆஸ்திரேலிய அணி 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. கில்கிறிஸ்ட் மற்றும் ஸ்டீவ் வாக் தவிர மற்ற அனைவரும் வந்து வீசினார்கள்.
ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், மார்க் வாக், ஸ்லேட்டர் போன்ற வீரர்களும் பந்தை தொட்டு வீசி பார்த்தனர், ஆனால் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை என்பதுதான் மிச்சம்.
கைதட்டி ஆரவாரம்
அன்றைய நாள் முடிவில் ராகுல் ட்ராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணனும் இருவரும் ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்கள் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களை வழி அனுப்பினார்கள்.
விவிஎஸ் லக்ஷ்மன் 452 பந்துகள் பிடித்து 281 ரன்கள் எடுத்தார். ராகுல் டிராவிட் 353 பந்துகள் பிடித்து 180 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 805 பந்துகள் பிடித்து அதாவது 135 ஓவர்கள் பேட்டிங் செய்தனர்.
ஸ்டீவ் வாஹ் செய்வது அறியாது திகைத்து திணறிபோனார். ஆஸ்திரேலியா வீரர்கள் வெற்றியின் நம்பிக்கை இழந்தனர்.
வெற்றி பெற முடியாது இனி ஆட்டத்தை சமன் செய்தால் போதுமென்று ஐந்தாவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா தொடர்ந்தது
இந்தியா வெற்றி
ஐந்தாவது நாள் ஆரம்பத்தில் சிறிது நேரத்தில் இந்தியா 178 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 657 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியாவை விட 383 ரன்கள் முன்னிலை பெற்று 384 ரன்கள் இலக்காக வைத்தது.
இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 166 ரன்களுக்கு 3 விக்கெட்டை மட்டும் இழந்து இருந்தது.
சச்சின் மற்றும் ஹர்பஜன் இருவரும் ஆஸ்திரேலியாவை கலங்கடித்தார்கள். ஹர்பஜன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.
ஆஸ்திரேலியா தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அணி உலக அளவில் கவனம் பெற்றது. ஹர்பஜன் இந்த போட்டியில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ஆஸி. எதிரி லக்ஷ்மன்
281 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார் லக்ஷ்மன். ஆஸ்திரேலியாவின் சிம்ம சொப்பனமாக, தான் ஓய்வு பெறும் வரை இருந்து வந்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விவிஎஸ் லக்ஷ்மன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 10 சதங்கள் அடித்துள்ளார். கவாஸ்கர் பார்டர் திராப்பி தொடரை 1-1 கணக்கில் சமன் செய்தது.