ஆம்பிடெக்ஸ்டிரஸ் (Ambidextrous) : இவர்களைப் பற்றித் தெரியுமா?
இரண்டு கைகளையும் ஒரே திறனோடு பயன்படுத்துபவர்களை ‘ஆம்பிடெக்ஸ்டிரஸ்’ (Ambidextrous) என்று அழைப்பார்கள்.
உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 1% மட்டுமே இத்திறமை படைத்தவர்கள் உள்ளனர்.
இத்தகைய திறன் படைத்தவர்கள், தினமும் தங்களது வலது மற்றும் இடது மூளையை ஒரே நேரத்தில் இயக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
லியோனார்டோ டா வின்சி , பென் பிராங்க்ளின் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பல பிரபலங்கள் இத்தகைய திறன் படைத்தவர்களே!
ஆம்பிடெக்ஸ்டிரஸ் திறன் பிறவியிலேயே இருக்குமா?
இவர்கள் பிறக்கும்போதே இத்தகைய ஆற்றலுடன் பிறப்பதில்லை. தொடர்ந்து இரண்டு மூளைகளையும் இயக்கிப் பழகுவதன் மூலமே இந்நிலையை அடைகின்றனர்.
மனித மூளை இரண்டு பிரிவுகளால் ஆனது. வலதுபுறம் உள்ள மூளை இடது பக்க உறுப்புகளையும், இடதுபுறம் உள்ள மூளை வலதுபக்க உறுப்புகளையும் கட்டுப்படுத்தும்.
கோவிலில் தீபம் காட்டிக்கொண்டே மணி அடிப்பவர்கள், மத்தளம் வாசிப்பவர்கள் இந்த திறன் படைத்தவர்களே.
சாதாரணமானவர், மத்தளம் வாசிக்க முயன்றால், முடியாது. காரணம், இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் இயக்க முடியாது.
அதுவே, பழக்கப்படுத்திக் கொண்டே இருந்தால் எளிதாக மத்தளம் வாசிக்க முடியும். இதற்கு காரணம், ஒரே நேரத்தில் இருபக்க மூளையும் வேலை செய்வதே ஆகும்.
வீன வந்தினி பள்ளிக்கூடம்:
இப்பள்ளி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிங்க்றவுளி என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு, ஆம்பிடெக்ஸ்டிரஸ் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
வீன வந்தினி பள்ளியின் நிறுவனர் முன்னாள் ராணுவ வீரர் V.P. ஷர்மா. இவர், இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் பண்டிட் ராஜேந்திர பிரசாத், அவர்களின் திறனை பார்த்து வியந்துள்ளார்.
காரணம், ராஜேந்திர பிரசாத் இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் இயக்கும் திறன் கொண்டவர். அதன் பிறகே இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது.
பள்ளியின் சிறப்பு
எல்லாப் பள்ளிகளைப் பேன்றே வீன வந்தினி பள்ளியும் இயங்கும். மற்ற பள்ளிகளில் உள்ள படங்களே இங்கும் நடத்தப்படும்.
ஒரு வகுப்பு 45 நிமிடம் நடைபெறும். ஆனால், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 15 நிமிடம், மாணவர்கள் கட்டாயம் இரண்டு கைகளிலும் எழுத வேண்டும்.
மேலும், ஒரே நேரத்தில் 6 மொழிகளை எழுத மற்றும் பேச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இப்பயிற்சியின் மூலம், இரண்டு வெவ்வேறு மொழிகளை ஒரே நேரத்தில், இரண்டு கைகளில் எழுதுகின்றனர்.
சாதாரண மாணவர்கள் ஒரு தேர்வை 3 மணி நேரம் எழுதுகின்றனர். சிலருக்கு 3 மணி நேரம் கூட போதாது. ஆனால், ஆம்பிடெக்ஸ்டிரஸ் ஒரு தேர்வை ஒண்டரை மணி நேரத்தில் முடிக்கும் திறன் பெற்றவர்கள்.
தென்கொரியாவுக்கு பயிற்சி
தென்கொரியா ஆராய்ச்சியாளர்கள், தங்கள் நாடுகளிலும் ஆம்பிடெக்ஸ்டிரஸ்களை அதிக அளவு உருவாக்க, இந்தப் பள்ளியில் பயன்படுத்தப்படும் சில எளிய வழிமுறைகளை அறிந்து சென்றுள்ளனர்.
ஆம்பிடெக்ஸ்டிரஸ்கள் அதிபுத்திசாலிகளா?
இவர்கள் மற்ற மாணவர்களைப் பேன்றே அறிவு படைத்தவர்கள். சக மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே இவர்களும் எடுக்கின்றனர். ஆம்பிடெக்ஸ்டிரஸ் என்றால் புத்திசாலிகள் என்று பொருள் அல்ல.
சாதாரணமானவர்களைக் காட்டிலும் கூடுதல் திறமை கொண்டவர்கள். இசைக்கருவி, ஓவியம், சிலம்பம், அறுவை சிகிச்சை மற்றும் வாள்வீச்சு போன்ற கலைகளில் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.