ஐபிஎல் போட்டி நடைபெறுமா? சர்ச்சை துவங்கியது!
12-ம் ஐ.பி.எல் தொடர் வழக்கமான ஐபிஎல் போட்டி போன்று இருக்காது, சற்று வித்தியாசமாக இருக்கும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு ஐ.பி.எல் லீக் போட்டிகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலும், ஐபிஎல் போட்டிகளும் ஒரே காலங்களில் நடக்க இருப்பதே இதற்கு காரணம்.
தேர்தல் சமயம் என்பதால், அரசாங்கத்தால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது. எனவே, போட்டிகளை எப்படி நடத்தலாம் என பிசிசிஐ குழப்பமடைந்தது.
கடந்த வருடத் தேர்தல் சமயங்களில், தென்னாப்ரிக்கா அல்லது அரபுநாடுகளில் போட்டியை நடத்தியது போன்று வெளிநாடுகளில் ஐபிஎல்-யை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை.
இந்தியாவில் நடந்தால் மட்டுமே ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருக்கும் என்பது பிசிசிஐ-யின் முடிவு. எனவே எப்படியாவது போட்டியை இந்தியாவில் நடத்தும் முனைப்பில் உள்ளது.
இம்முறை சற்று வித்தியாசமாக போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. வெறும் மூன்று போட்டிகள் மட்டுமே ஒவ்வொரு அணியின் சொந்த மாநில மைதானத்தில் நடக்கும்.
மற்ற அனைத்துப் போட்டிகளும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் 5 முதல் 6 பொதுவான மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரின் பாதுகாப்பை முன்வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கப்படாததால், போட்டிகள் குறித்த முழு அட்டவணையைத் தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டவுடன் வெளியிட முடிவுசெய்துள்ளது.
எனவே, வருகிற பிப்ரவரி 2 அல்லது 3-ம் தேதிகளில் போட்டி அட்டவணையைத் திருத்தம்செய்து வெளியிடப்போவதாகக் கூறியுள்ளது.