பேட்ட திரைவிமர்சனம் – நஞ்சாகூ ரஜினியின் பேட்ட
பேட்ட படம் பார்க்க, தியேட்டருக்கு வந்த 40 வயதில் இருந்து 80 வயது உள்ள ரசிகர்கள் பலர் எழுந்து ஆடி உற்சாகமாகக் கொண்டாடிய படம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய ரஜினியைப் பார்த்த ரசிகர்கள், தங்களின் இளவயதுக்கு சென்று ஆடிப்பாடி குதித்துவிட்டனர்.
முதல் பாதி
முதல் பாதியில் ஒருபுறம் ரஜினி பூஸ்ட் கொடுக்க, இன்னொரு பக்கம் சிம்ரன் கிறுகிறுக்க வைக்கிறார்.
சீமராஜாவுல, ‘எப்படி இருந்த சிம்ரன் இப்டி ஆயிட்டாங்களே’ என சீமக்கோழிய, சீக்குகோழி ரேஞ்சுக்கு மொக்கை பண்ணி வைத்திருந்தனர்.
ஆனால், பேட்ட படத்தில் சிம்ரனை இளமையாகவும், கிளாமராகவும் ரசிக்கும்படியாக காட்டியிருந்தனர். அடுத்து ஒரு ரவுண்டு இருக்கு.
ஹாலிவுட் படங்களில் மட்டுமே 40 வயதுக்கு மேற்பட்ட நடிகைகளை கவர்ச்சிக்கும், கதையின் நாயகியாகவும் நடிக்க வைப்பார்கள்.
தமிழ் சினிமாவிலும் அதைச் சாத்தியப்படுத்தி அனைவரையும் ரசிக்கும்படியாக சிம்ரன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்த கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள்.
ரஜினியை இவ்வளவு இளமையாக காட்ட அவருடைய துடிப்பு மட்டுமே போதாது, இன்றைய தொழில்நுட்பம் முழுக்க முழுக்க கைகொடுத்துள்ளது.
அதுவும் குறிப்பாக அவர் “நஞ்சாகூ” சுற்றும் விதம் மிகச்சிறப்பு. கிராபிக்ஸ் என்றாலும் மிகவும் நேர்த்தியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர்.
ரஜினி, சிம்ரன் மற்றும் சனத் இவர்களைத் தவிர மற்ற எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் படத்தில் ஸ்கோப் இல்லை.
ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா ஆகியோர் அந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தேவையே இல்லை.
இத்தனை வருட சினிமா வாழ்வில் ரஜினியுடன் நடிக்கவேண்டும் என முட்டி மோதிப் பார்த்த த்ரிஷாவின் கனவு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நிறைவேறி உள்ளது.
இரண்டாம் பாதி
முதல் பாதியில் எழுந்து ஆடிய ரசிகர்கள் இரண்டாம் பாதியில் கை தட்டலைக் காண்பதே அரிதாக இருந்தது.
ஒரு கட்டத்தில், வில்லன் நவாசுதினைக் கொலை செய்தவுடன் படம் முடிந்தது. ஆளை விட்டால் போதும் எனப் பாதி ரசிகர்கள் எழுந்து ஓடிவிட்டனர்.
ஆனால், அதற்குப் பிறகும் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளனர். அது ரசிக்கும் படியாகக்கூட இல்லை. எதுக்கு இந்த ட்விஸ்ட் என முகம் சுழிக்கும் படியாகவே இருந்தது. நவாசுதினைக் கெத்தாக அறிமுகம் செய்து மொக்கையாக முடித்துள்ளனர்.
90-ல் இருந்த ரஜினியின் வேகத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால் அவருடைய தைரியத்தைப் பார்க்க முடியவில்லை.
மருந்துக்கூட ஒரு தைரியமான நேரடி அரசியல் வசனங்கள் இல்லை. பொத்தாம் பொதுவாகவே அரசியல் பேசியுள்ளார்.
மொத்தத்தில் பேட்ட நஞ்சாகூ ரஜினியின் பேட்ட