வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வெறிபிடித்த இந்திய வீரர்கள்
முதல் இரண்டு போட்டியில் 1-1 வெற்றி என்ற கணக்கில் சம பலத்துடன் மூன்றாவது போட்டியில் இந்தியா-இண்டீஸ் அணி மோதியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த இரண்டு போட்டியிலும் சரியாக விளையாடவில்லை என ரோஹித் மீது விமர்சனம் எழுந்தது.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டார். சிக்சர் மழை பொழிந்தார்.
சர்வேதச போட்டிகளில் 400 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா, இப்போட்டியின் மூலம் படைத்தார்.
ரோஹித் 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த ரிஷப் பண்ட் டக்அவுட்டாகி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார்.
பின்னர் வந்த விராட் கோலியின் ருத்ர தாண்டவத்தைக் கண்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
மறுபுறம் ராகுல் விறுவிறுவென ரன்களைக் குவித்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் 91 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதிவரை களத்தில் நின்ற கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். நான்கு பவுண்டரி, ஏழு சிக்ஸர்கள் இதில் அடங்கும்.
மிரண்டுபோன பிளாக் பேந்தர்ஸ்
எவ்வளவு ரன்கள் என்றாலும் சேஸ் செய்யக்கூடிய அணியாக உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியே மிரளும் அளவிற்கு இந்திய வீரர்கள் ஸ்கோர் குவித்தனர்.
கடைசிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே குவித்தனர்.
ஹெட்மயர் 41, பொல்லார்டு 68 ரன்கள் குவித்தனர். மற்ற அனைத்து வீரர்களின் சொதப்பலால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியது.