தேசியக் கொடி மூலம் பாஜகவின் முகத்திரை பற்றி சூட்சமமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.
அனுராக் காஷ்யப் இந்தி இயக்குனர். இவர் திரைக்கதை எழுதிய முதல் படமும் சரி.. இயக்கிய முதல் படமும் சரி… திரையரங்கில் வெளியாகவில்லை.
சென்சார் போர்டால் தடை செய்யப்பட்டது. பைரசி இணையதளங்களின் மூலமே இவருடைய படங்கள் பிரபலமானது.
அனுராக் காஷ்யப் என்ற ஒரு கலைஞரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததே பைரசி இணையதளங்கள் தான். இதை அவரே பல மேடைகளில் கூறியுள்ளார்.
‘இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். இவருடைய படங்கள் மட்டும் சர்ச்சையில் சிக்குவதில்லை, இவருடைய கருத்துக்களும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
பாஜக அரசை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் இவர். சில நாட்களாக பாஜகவிற்கு எதிராக கருத்துச் சொல்வதை நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பாஜக கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் நாடே போராட்ட களமாக மாறியுள்ளது.
மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து, மாணவர்களை கேலி செய்யும் விதமாக ஒரு வீடியோவை நடிகர் அக்ஷய் குமார் லைக் செய்தார்.
டிவிட்டரில் அதற்காக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதை டிஸ்லைக் செய்துவிட்டு தெரியாமல் கை பட்டு விட்டதாக கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர் ஒருவர் அக்ஷய் குமார் முதுகெலும்பு இல்லாத மனிதர் என ஒரு ட்விட் செய்திருந்தார்.
உடனே அந்த ட்விட்டை ‘Absolutely’ எனக்கூறி அனுராக் காஷ்யப் ரீட்விட் செய்து அக்ஷய் குமாரின் செயலைக் கடுமையாக எதிர்த்தார்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய தேசியக்கொடியின் படத்தை வெளியிட்டார்.
அதில் பச்சை நிறம் தரைமட்டத்துடனும், வெள்ளை நிறம் சிறிதளவும் காவிநிறம் முழுவதுமாகப் பரவுவது போன்றும். அதை அசோகச் சக்ர மனிதன் தடுத்து நிறுத்துவது போன்றும் உள்ளது.
பாஜக இன்னும் கொஞ்சம் விட்டால் இந்தியாவை காவி மயமாகவும், இந்திய தேசியக் கொடியை காவி நிறமாகவும் மாற்றிவிடும் அதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது என ஒரு படத்தின் மூலமாக பாஜகவின் முகத்திரையைச் சூட்சமமாக கூறியுள்ளார்.