Sirkazhi Govindarajan; பட்டணந்தான் போகலாமடி பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் நினைவுதினம்! புகழ்பெற்ற தமிழ் கர்நாடக இசைப்பாடகரும் பின்னணி பாடகருமான சீர்காழி கோவிந்தராஜன் நினைவுதினம் இன்று.
இன்று சீர்காழி கோந்தராஜனின் நினைவுதினம்.
கடந்த 1933 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி சீர்காழியில் பிறந்தார் கோவிந்தராஜன். இவரது பெற்றோர் சிவசிதம்பரம், அவையாம்பாள்.
தனது சிறு வயதிலே பக்திப் பாடல்களை பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். எனினும், சென்னை இசைக் கல்லூரியில் சேர்ந்து முறையாக இசை பயின்றார்.
திரைப்படத்திற்காக முதன் முதலில் கடந்த 1953 ஆம் ஆண்டு வந்த பொன்வயல் என்ற படத்திற்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளார்.
ஆனால், அந்த பாடலுக்கு முன்பாகவே ஜெமினி நிறுவனம் தயாரிப்பில் வந்த ஔவையார் படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார்.
அந்தப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பெயர் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகளுக்கு மேல் திரைப்பட பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடி ரசிகர்களை இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார்.
பட்டணந்தான் போகலாமடி, ஓடம் நதியினிலே, கொங்கு நாட்டுச் செங்கரும்பே, மாட்டுக்கார வேலா என்று பல பாடல்களை பாடியுள்ளார்.
ஏழிசை மன்னர் என்று புகழப்பட்ட சீர்காழி கோவிந்தராஜன் மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
விருது
சீர்காழி கோவிந்தராஜன் சங்கீத அகாடமி விருது, பத்மஸ்ரீ, இசைப் பேரறிஞர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர்கள்
எம்.எஸ். விஸ்வநாதன், டி எம் சௌந்தரராஜன், பி பி ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், ஏ.எல்.ராகவன், கே ஜே ஏசுதாஸ் ஆகியோர் உடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளார்.
எம்.வேணு, கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன், ஜி.இராமநாதன் ஆகியோரது இசையில் ஏராளமான பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.
டூயட் பாடல்கள்
அதோடு, பின்னணி பாடகிகளான எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, கே ஜமுனா ராணி, ஜிக்கி, பி சுசீலா, கே ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்களம் ராஜேஸ்வரி, சூலமங்களம் ஜெயலட்சுமி, பாலசரஸ்வதி தேவி, வானி ஜெயராம் ஆகியோருடன் இணைந்து டூயட் பாடல்களை பாடியுள்ளார்.
மேலும், என்.எஸ்.கிருஷ்ணன், டிஆர் மகாலிங்கம், பி பானுமதி, எஸ் வரலட்சுமி மற்றும் மனோரமாக ஆகிய நடிகர், நடிகைகளுடன் இணைந்தும் டூயட் பாடல்கள் பாடியுள்ளார்.
படங்கள்
கந்தன் கருணை, வா ராஜா வா, திருமலை தேன்குமாரி, அகத்தியர், தெய்வம், ராஜராஜ சோழன், திருவருள், தசாவதாரம், தாய் மூகாம்பிகை, மீனாட்சி திருவிளையாடல் ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
இந்த நிலையில், சீர்காழி கோவிந்தராஜன் 1988 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி தனது 55ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் காலமானார். இன்று அவரது, 32ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.