VTV2Trolls: ஐ லவ் யூ சொன்னா கொரோனா போயிருமா: சிம்பு, த்ரிஷாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தின் ஒரு பகுதியாக சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ், நாக சைதன்யா, சமந்தா ஆகியோரது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகம் வரும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த சூழலில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஒரு பகுதியாக ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி அதனை வெளியிட்டுள்ளார். ஆம், கார்த்திக் டயல் செய்த எண் என்ற அந்த குறும்படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாகவும், கொரோனா லாக்டவுன் பற்றியும், கார்த்திக், ஜெஸி காதல் விவகாரம் ஆகியவற்றையும் மையப்படுத்தி வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், இந்த குறும்படத்தில், சிம்பு, தனக்கு ஐ லவ் யூ சொல்லும்படி கேட்கவும், அதற்கு த்ரிஷா நான் ஐ லவ் யூ சொன்னா கொரோனா போயிருமா என்று கேட்க, அதற்கு சொல்லித்தான் பாரேன் என்று சிம்பு சொல்ல ஒரே காமெடியாகவும், ரசிகர்கள் கலாய்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.
அப்படி என்னதான் இந்த குறும்படத்தில் இருக்கிறது? இருவரும் பேசிக்கிறாங்க. அவ்வளவு தான். வேறென்ன இருக்கிறது? இது போன்ற ஒரு குறும்படம் தேவையா என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
இதற்கிடையில், சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா 2 என்று குறிப்பிட்டு சிம்புவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.