அஜித்தை விளம்பரத்தில் நடிக்க வைக்க முயற்சி: சம்மதிப்பாரா?
மதுரையில் வசிக்கும் ஜான்சி ராணி, மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
அம்மனுவில், “போலியோ நோயை ஒழிக்க வருடத்திற்குப் பலகோடிகள் அரசு சார்பாக செலவிடப்பட்டு வருகிறது.
ஆனால் சமீப காலமாக போலியோ சொட்டு மருந்து முகாம் சரியாக நடைபெறுவதில்லை. போலியோ நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு குறைந்துவிட்டது.
எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு அதிகப்படுத்த வேண்டும். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெற உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அரசுத்தரப்பில் வரும் 10-ம் தேதி சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனக் கூறினர்.
ஆனால், போதுமான விளம்பரங்கள் செய்யவில்லை. இதனால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறைந்துவிட்டது என நீதிபதியிடம் முறையிட்டார்.
இதனைக் கருத்தில்கொண்ட நீதிபதிகள், தமிழின் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதரராகச் சேர்த்து உத்தரவிட்டனர்.
நடிகர்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் மக்களிடம் சென்று சேரும் எனக்கூறி வழக்கை மூன்று வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சூர்யா ஏற்கனவே நிறைய விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்துள்ளார். விஜய்யும் விளம்பரங்களில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் அஜித் கடைசியாக சன்ரைஸ் விளம்பரத்தில் நடித்தார். அதன்பிறகு எந்த ஒரு விளம்பரத்திலும் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார். எனவே அஜித் இதற்குச் சம்மதிப்பாரா என்பது சந்தேகமே?