Sathankulam: போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும்: பிரபலங்கள் கருத்து! சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சாந்தனு
போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும். இது விசாரணை இல்லை. இது கொலை. சட்டம் எல்லாவற்றிகும் மேலாக இருந்தால், இது தான் நமது சக்தியை காட்ட வேண்டிய நேரம்.
ஜெயம் ரவி
சட்டத்தைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை. மனிதத்தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ்
சாத்தான்குளத்தில் என்ன நடக்கிறது? இது பயங்கரமானது. மனித நேயம் அவமதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இறந்த அந்த ஏழை ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள் வைரஸை விட ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுல்யா ரவி
முற்றிலும் மனிதாபிமானமற்றது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டனர். குற்றவாளிகளுக்கு எதிராக நமது சக்தியை காட்ட வேண்டிய நேரம் இது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கௌதம் கார்த்திக்
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது போலீசார் மிருகத்தனத்தை காட்டியுள்ளனர். இது கொடூரத்தின் உச்சம்.
இது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியை நிலைநிறுத்தும் நல்ல மற்றும் நேர்மையான காவல்துறையினரின் வேலை அல்ல. இது சீருடையில் உள்ள காட்டுமிராட்டித்தனமான குற்றவாளிகளின் வேலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது வழக்கில் தாமதமின்றி சட்டம் அதன் கடமையைச் செய்து குற்றவாளிகளை தண்டிப்பதை காணலாமா?
ஒரு போதும் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது. ஒரு குடும்பம் தங்களுக்கு பிடித்தமானவர்களை இழந்துவிட்டது. தாமதமான நீதி மறுக்கப்படுகிறது.
வரலட்சுமி சரத்குமார்
சாத்தான்குளம் போலீசாரால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலீசாரால் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் இல்லை. ஒட்டு மொத்த காவல்துறையையும் குறை சொல்ல முடியாது. ஆனால், அந்த 2 காட்டுமிராண்டித்தனமான போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
ஹன்சிகா மோத்வானி
ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை கூறுவதற்கு பதிலாக அந்த 2 காட்டுமிராண்டித்தனமான போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆகையால் அந்த 2 கொடூர போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுஜித்ரா
தமிழ் பேச தெரியாத அனைவருக்கும் சாத்தான்குளத்தில் என்ன நடந்தது என்று தெரியும். அப்பாவியான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சீரியல் கில்லரான 2 போலீஸ் அதிகாரிகளால் அடித்தே கொல்லப்பட்டனர்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்க்கு நீதி கிடைக்க வேண்டும். கொடூர கொலைகார போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்.