Kaniha Maa Short Film; இயக்குநரான நடிகை கனிகா: அன்னையர் தினத்தில் மா குறும்படம் வெளியீடு! நடிகை கனிகா இயக்குநர் அவதாரம் எடுத்து அன்னையர் தினத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மா என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.
அன்னையர் தினத்தில் தான் இயக்கி நடித்த மா என்ற குறும்படத்தை நடிகை கனிகா வெளியிட்டுள்ளார்.
பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இப்படத்தைத் தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராஃப், டான்சர், வரலாறு, ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகையைத் தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட பணிகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை கனிகா தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு மா என்ற குறும்படம் ஒன்றை இயக்கி அதில், நடிக்கவும் செய்துள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு மா என்ற குறும்படத்தை வெளியிட்ட கனிகா, கடைசியாக உங்களது அம்மாவை கட்டிப்பிடித்தது எப்போது? என்று அந்த வீடியோவில் கேட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.