SS Rajamouli; பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலிக்கு கொரோனா! பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகுபலி இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினரையும் கொரோனா தாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்திய அளவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகப்படுத்தி வருகிறது.
கொரோனா காரணமாக ஏற்கனவே 6 முறை லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6ஆம் கட்ட லாக்டவுனும் நாளை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.
வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட பணிகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், எஸ்.எஸ்.ராஜமௌலி அண்மையில் தனது வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
பிரபலங்கள் பலரையும் தாக்கி வரும் கொரோனா தெலுங்கு சினிமாவின் முன்னணி பிரமாண்ட இயக்குநரான எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் தென்பட்டது.
அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை மேற்கொண்டோம். ஆனால், பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா பாதிப்பு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டிலேயே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
எந்தவித அறிகுறியும் இல்லாமல், நாங்கள் நன்றாகவே இருக்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.