Home சினிமா கோலிவுட் நான் பெரிய நடிகர் இல்லை என்றாலும் 20 சதவிகிதம் குறைக்கிறேன்: ஹரிஷ் கல்யாண்!

நான் பெரிய நடிகர் இல்லை என்றாலும் 20 சதவிகிதம் குறைக்கிறேன்: ஹரிஷ் கல்யாண்!

274
0
Harish Kalyan

Harish Kalyan; நான் பெரிய நடிகர் இல்லை என்றாலும் 20 சதவிகிதம் குறைக்கிறேன்: ஹரிஷ் கல்யாண்! கொரோனா சூழ்நிலை காரணமாக தனது சம்பளத்திலிருந்து 20 சதவிகிதம் குறைப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பெரிய நடிகர் இல்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில், தனது சம்பளத்திலிருந்து 20 சதவிகிதம் குறைப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண், மனோபாலா, பார்த்திபன், யோகி பாபு, சூரி, நயன்தாரா என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் விதமாக, பிரபலங்கள் பலரும் தங்களது சம்பளத்தை குறைத்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி தனது சம்பளத்திலிருந்து 25 சதவிகிதம் குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியும், அருவா படத்திற்கு தான் வாங்கும் சம்பளத்திலிருந்து 25 சதவிகிதம் குறைப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சம்பளத்திலிருந்து 20 சதவிகிதம் குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கொரோனா சூழ்நிலை கருதி நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்திலிருந்து 25 சதவிகிதம் குறைக்கப்போவதாக அறிவித்தார்.

தயாரிப்பாளர்களின் நலன் கருதி அவர் எடுத்துள்ள இந்த முடிவு அனைவரும் வரவேற்கத்தக்க ஒன்று. நானும் அதை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

அதன்படி, எனது சம்பளத்திலிருந்து 20 சதவிகிதம் குறைக்கப்போகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஒன்றும் பெரிய சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ ஒன்றும் இல்லை. இருந்தாலும், என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் ஹரியும் தனது சம்பள விகித குறைப்பு பற்றி அண்மையில் தெரிவித்திருந்தார். இதே போன்று அனைவரும் முன்வந்தார்கள் என்றால் நல்ல விஷயமாக இருக்கும்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெகுவிரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். நன்றி என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here