அனுஷ்காவின் நிசப்தம் டிஜிட்டல் வெளியீடு: தயாரிப்பாளரின் டுவிட்டால் குழப்பம்! அனுஷ்கா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள நிசப்தம் படம் டிஜிட்டலில் வெளியாக இருப்பது தொடர்பாக தயாரிப்பாளர் கோனா வெங்கட் டுவிட்டால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அனுஷ்காவின் நிசப்தம் டிஜிட்டலில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.
இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் சைலன்ஸ். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தமிழில், நிசப்தம் என்ற டைட்டிலில் வெளியாக இருக்கிறது.
கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
ஆனால், இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிசப்தம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்ட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் இருக்கும் பெரும்பாலான படங்களை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றி நேரடியாக டிஜிட்டலில் வெளியிடுகிறது.
அந்த வகையில், ஏறகனவே பொன்மகள் வந்தால், பென்குயின், ஆர்கே நகர் ஆகிய படங்கள் டிஜிட்டலில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது அனுஷ்காவின் நிசப்தம் படமும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அனுஷ்காவின் படம் என்பதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா திரையரங்க உரிமையாளர்கள் வழக்கம் போல் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நிறைய கனவுகளோடு திரைத்துறைக்கு வந்துள்ளோம்.
எங்களது வேலைக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எங்களுக்கு ஊக்கமும், ஆக்சிஜனும் ஆகும்.
அந்த உணர்வுக்கு ஈடே கிடையாது. திரையரங்குகள் தான் சினிமாவில் அர்த்தம். அவற்றிற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவால், நிசப்தம் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறதா? அல்லது திரையரங்கில் வெளியாகிறதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.