Thalapathy Vijay; கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தளபதி விஜய் நிதியுதவி அளித்ததை நடிகர் கருணாகரன் விமர்சனம் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் கருணாகரன் விஜய்யைப் போன்று சம்பளம் கொடுத்தால் நாங்களும் நிதியுதவி செய்வோம் என்று விமர்சித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், சினிமா பிரபலங்கள் பலரும் பொருளுதவு, நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் தளபதி விஜய் ரூ.1.3 கோடி நிதியுதவி அளித்தார். தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சமும், கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.
மேலும், கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.5000 செலுத்தினார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.
விஜய் நிதியுதவி அளித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விஜய்க்கு நன்றி தெரிவித்தார். மேலும், நடிகர்கள், நடிகைகள் தாமாக முன்வந்து விஜய்யைப் போன்று உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், இதனை விமர்சிக்கும் வகையில், நடிகர் கருணாகரன் பெயரில் டுவிட்டரில், Same Salary Please என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜய்க்கு கொடுக்கும் சம்பளத் தொகையைப் போன்று சம்பளம் கொடுத்தால் தானும் உதவி செய்வேன் என்பது போன்று கருணாகரன் விமர்சனம் செய்ததாக தகவல் பரவியது.
இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து நடிகர் கருணாகரன் அப்படி ஏதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் சோஷியல் மீடியாவில் வரக்கூடிய எல்லாவற்றையும் நம்பிட்டு வர்றாங்க. நான் சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.
விஜய் சார் குறித்து கருத்து தெரிவித்ததற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ எனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு மூலமாக இதைச் செய்துவிட்டார்கள்.
விஜய் சார் மீது அதிக அன்பும், மரியாதையும் கொண்டவன் நான். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவி செய்திருப்பது என்பது பெரியது என்றார்.