Nayanthara; பெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா நிதியுதவி! கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு இல்லாத நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நயன்தாரா (Nayanthara) பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இந்தியாவில் மட்டும் 75 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் 2,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவி செய்யுமாறு பெப்ஸி (FEFSI) அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
படப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பெப்ஸி மூலமாகவோ அல்லது திரைப்பட நல வாரியம் மூலமாகவோ அரசு உதவி செய்ய வேண்டும்.
எங்களது கோரிக்கையை ஏற்று, இதுவரை ரூபாய் 1,59,64,000 மற்றும் அரிசி மூட்டைகளும் வழங்கி உள்ளார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை.
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் சினிமா தொழிலாளர்களைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருந்தார்.
இதற்கு முன்னதாக ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஜெகன் என்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களது பட்டியலில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார். ஆம், லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா பெப்ஸி தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியாத போது சினிமா படப்பிடிப்பு எப்போது நடைபெறும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது சரியாகும் என்று ஏங்கி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு இந்த நிதியுதவிதான் தற்போது கஞ்சி ஊற்றிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.