Paravai Muniyamma; எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும், பரவை முனியம்மாவின் பாடல்களுக்கு இணையாகாது! நாட்டுப்புற கலைஞரும், பாடகரும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று உடல் நலக்குறைவால் காலமானார்
பரவை முனியம்மா உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால், பரவை முனியம்மா என்று அழைக்கப்பட்டார்.
1943 ஆம் ஆண்டு பிறந்த பரவை முனியம்மா, சியான் விக்ரம் நடிப்பில் வந்த தூள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்தப் படத்திலேயே மதுரை வீரன் என்ற பாடலை விக்ரமுக்காக பாடி அசத்தியுள்ளார்.
தூள் படத்தைத் தொடர்ந்து, காதல் சடுகுடு, தேவதையைக் கண்டேன், ஏய், ஜெய சூர்யா, வேங்கை, மான் கராத்தே, வீரம், பூ, கண்ணாடிப் பூக்கள் என்று கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதோடு இல்லாமல், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியை தனக்கே உரிய ஸ்டைலில் தொகுத்து வழங்கினார்.
இவரது மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரில் மட்டுமல்லாமல், லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை, திரைப்பட பாடல்களைத் தவிர பரவை முனியம்மா பக்தி பாடல்களை பாடுவதில் கில்லாடிக்கு கில்லாடி. அதுவும், கருப்பசாமி பாடலா சொல்லவே வேணாம்.
அந்தளவிற்கு குரல் வலம் கொண்ட பரவை முனியப்பா, 18ம் படி கருப்பா, குறவன் குறத்தி ஆட்டம், ஜடா முனீஷ்வரர், கிராமத்து வாசனை, 108 திருப்பதிகள், மாரியப்பன் கும்மிப்பாட்டு, முனீஸ்வரன் பாடல் என்று ஏராளமான பக்திப் பாடல்களை பாடியுள்ளார்.
இந்தப் பாடல்களை எல்லாம் இப்போதும் கேட்கும் போது எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும், மரவை முனியம்மாவின் இது போன்ற பாடல்களுக்கு ஈடு இணை ஆகாது.
நம்மை அறியாமலும், ஆட தோன்றும் அளவிற்கு பாடல்களும், இசையும் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமையில் வாடிய பரவை முனியம்மாவின் கருத்தில் கொண்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவிற்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரமும், மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கினார்.
இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு நடந்து கொண்டே வருகிறது. கடந்த 20 ஆம் தேதி நடிகர் விசு காலமானார். 26 ஆம் தேதி நடிகரும், மருத்துவருமான சேதுராமன் காலமானார்.