பட்டாசு பாலு பசுபதி பர்த்டே டுடே! ஹவுஸ்புல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் பசுபதி இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பசுபதி பிறந்தநாள் இன்று.
சியான் விக்ரம் நடித்த ஹவுஸ்புல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பசுபதி.
ஆளவந்தான், தூள், விருமாண்டி, அருள், சுள்ளான், திருப்பாச்சி, குசேலன், கருப்பன், கொடிவீரன், அசுரன் என்று ஏராளமான படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடியனாகவும் நடித்துள்ளார்.
கடந்தாண்டு இவரது நடிப்பில் அசுரன் படம் திரைக்கு வந்தது. ஜீவா நடிப்பில் வந்த ஈ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். அதோடு, சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதும் பெற்றார்.
பொழிச்சலூர் பகுதியில் பிறந்த பசுபதி கூத்து பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயின்றுள்ளார்.
நாசரும், இவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அவர் மருதநாயகம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று பசுபதியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு விருப்பம் இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்து கமல் ஹாசனின் மருதநாயகம் படத்தில் அவருக்கு வில்லன் ரோல் கொடுக்கப்பட்டது.
ஆனால் இன்றுவரை மருதநாயகம் படம் திரைக்கு வரவில்லை. இன்னும் எடுத்துமுடிக்கப்படவில்லை.
மாறாக, நாசர் நடித்த மாயன் படத்தில் பசுபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தப் படம் திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பசுபதி இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.