Petta Actor Manikandan Achari Marriage: பேட்ட நடிகருக்கு கல்யாணமாம்: சிம்பிளாக நடக்குதாம்! ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் நடித்த மணிகண்டன் ஆச்சாரிக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் பாபி சிம்ஹாவின் கூட்டாளியாக நடித்திருப்பவர் நடிகர் மணிகண்டன் ஆச்சாரி. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
மணிகண்டன் ஆச்சாரிக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கான அழைப்பிதழுடன் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். மேலும், அவரை திருமணத்திற்கு அழைத்துள்ளார்.
கொரோனா காரணமாக தனது திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுத்து வருகிறார்.
மணிகண்டன் ஆச்சாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டால் போதும் என்ற எனது முடிவுக்கு வருங்கால மனைவி அஞ்சலியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னதாகவே திருமணம் நிர்ணயிக்கப்பட்டதால், திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களும் அழைக்கப்பட்டனர். ஆனால், இப்போது சூழ்நிலை மாறிவிட்டது.
இதன் காரணமாக, ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக பிரமாண்டமாக நடத்த இருந்த எனது திருமணத்தை அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மிகவும் எளிமையான முறையில் நடத்த நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள துறமுகம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடக்க இருக்கிறது.
மேலும், விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்திலும் மணிகண்டன் ஆச்சாரி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.